இந்த வலைப்பூவைத் தொடங்கிய காலத்தில், பல தொடர்ச்சியாக எழுத வேண்டிய பணிகள் இருந்தன. அப்படி சங்கக்குரல் உள்ளிட்ட இதழ்களில் வெளியானவற்றை மீண்டும் இங்கு பதிவிட நான் விரும்பாததால், இது அப்படியே நின்று போனது. இப்போது, இதற்காகவே தொடர்ந்து எழுதத் திட்டமிட்டிருக்கிறேன். இதில் பதிவிடப்படுபவற்றை பிறர் பயன்படுத்திக்கொள்ளத் தடையில்லை!
-அறிவுக்கடல்

Wednesday, January 27, 2021

பொது விடுமுறை...!

இன்று தைப்பூசத்திற்காக அரசு விடுமுறை... அரசு விடுமுறைகள் பற்றியே மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பது என் நிலைப்பாடு. பொதுவான விடுமுறைகளை ரத்து செய்துவிட்டு, அவற்றை பணியாளர்களின் விடுப்புக் கணக்கில் சேர்த்துவிடலாம் என்பது என் கருத்து. விடுமுறையும் அவர்களுக்குத் தேவையானபோது பயன்படும், அலுவலகங்களும், தொழிற்சாலைகளும் தொடர்ந்து இயங்கும். இதெல்லாம் சாத்தியமா? இந்த உதாரணத்தைப் பார்ப்போம்!

 

சோவியத் ஒன்றியத்தில் புதிய நாட்காட்டி ஒன்றை 1923இல் ஸ்டாலின் அறிமுகப்படுத்தினார். புரட்சி முடிந்ததுமே, 1918இலேயே சோவியத் ஒன்றியம், உலகோடு ஒத்திசைந்து, கிரிகோரியன் நாட்காட்டிக்கு மாறியிருந்தது. 1923இல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தப் புதிய நாட்காட்டியில் வாரம் மட்டும் மாற்றியமைக்கப்பட்டது. வாரத்திற்கு 5 நாட்கள்தான். கிழமைகள் கைவிடப்பட்டு, ஒவ்வொரு நாளுக்கும் ஒரு வண்ணம் தரப்பட்டது. அவ்வாறே குடிமக்களுக்கும் வண்ணம் ஒதுக்கப்பட்டது. பச்சை வண்ணம் கொண்டவருக்கு, பச்சை நாளில்(கிழமை) ஓய்வு. இதனால், உலகின் மற்ற நாடுகளின் தொழிலாளர்களுக்கு ஏழு நாள் கொண்ட வாரத்திற்கு, ஒரு நாள் வீதம் ஆண்டிற்கு 52 ஓய்வு நாட்கள் கிடைத்தால், சோவியத்தின் தொழிலாளர்களுக்கு 5 நாளுக்கு ஒரு நாள் வீதம் ஆண்டிற்கு 72 நாட்கள்(365இல் 5 நாட்கள் புரட்சி தொடர்பான பொது விடுமுறை நாட்கள்) ஓய்வு கிடைத்தன. ஆனால், மறுபுறம் பிற பொதுவான விடுமுறைகள் நீக்கப்பட்டதால், உழைக்கும் திறன் கொண்ட மனிதர்களில் 80% பேர் ஆண்டின் எல்லா காலகட்டத்திலும் உழைத்துக்கொண்டே இருந்தனர், கூடுதல் ஓய்வும் பெற்று! சோவியத் ஒன்றியத்தின் பிரமாண்ட வளர்ச்சியைத் தொடங்கி வைத்ததில் ஸ்டாலின் கொண்டுவந்த இந்த நாட்காட்டிக்கு முக்கியப்பங்கு உண்டு. குடும்பத்தினருக்கு மாறுபட்ட வண்ணங்கள் இருந்ததால், மாறுபட்ட ஓய்வு நாட்கள் இருந்தது உள்ளிட்ட காரணங்களால், 1929இல் 6 நாள் வாரமாகி, 1940இல் 7 நாள் வாரத்திற்கே சோவியத் மாறியது. ஆனால், அதிக ஓய்வையும் அளித்து, அதிக உற்பத்தியையும் உருவாக்கிய இந்த முயற்சி நிச்சயமாக மீண்டும் கவனிக்க வேண்டியதாக இன்று இருக்கிறது.

இன்று எல்லா நிறுவனங்களும் 24/7 சேவை என்று பேசத் தொடங்கியிருக்கின்றன. உலகின் முதல் இரண்டு பொருளாதாரங்களின் ஜிடிபியில் சேவைத் துறைகளே (அமெரிக்கா 80%, சீனா 51.6%) மிகப்பெரும் பங்கை அளிக்கின்றன. வேட்டைக்கார(ஹண்ட்டர் கேதரர்) வாழ்க்கையிலிருந்து பயிரிடக் கற்றபோது மனிதனுக்கு நாள் முழுவதும் விவசாயம்தான் வேலையாக இருந்தது. சித்திரமும் கைப்பழக்கம் என்று அதன் நுட்பங்களைக் கற்றபின், உழைப்பும், நேரமும் மிச்சமாகி, தொழில்கள் உருவாயின. அவற்றால் உருவான கருவிகளும், தொழில்நுட்பங்களும் விவசாயத்துக்கான நேரத்தையும், உழைப்பையும் மேலும் குறைத்ததோடு நில்லாமல், அந்தக் கருவிகளை உற்பத்தி செய்வதிலும் அதே தாக்கத்தை ஏற்படுத்தியதால், அவற்றிற்குத் தேவையானவையும் குறைந்தன. அவற்றில் உபரியான(வேலை வாய்ப்பிழந்த!) மனிதர்கள், (வேலை வாய்ப்பிருந்து)உழைப்பு போக எஞ்சிய நேரத்தைக் கொண்டாட விரும்பிய மனிதர்களுக்கு(டாக்சி ஓட்டுவதிலிருந்து, ஓட்டலில் பரிமாறுவது என்று மிக நீண்ட பட்டியலாக)  சேவை செய்பவர்களாகி சேவைத்துறையாகவே ஆனது. 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிறந்திருந்த அந்த சேவைத்துறை, இன்று பொருளாதாரங்களை நிர்ணயிக்கிற ஒன்றாக வளர்ந்திருக்கிறது. முதலிரண்டு நாடுகளின் பொருளாதாரத்தில் தொழில்துறையும்- அமெரிக்கா 19.1%, சீனா 40.5%, விவசாயமும் - அமெரிக்கா 0.9%, சீனா 7.9% குறைந்த பங்கையே அளிக்கின்றன என்பதுடன்,  சேவைத்துறையின் பங்கு மிகவேகமாக உயர்ந்து கொண்டேயும் இருக்கிறது. அப்படியான நிலையில்தான், 24/7 சேவை என்பது அவசியமாகிறது.

உலகம் 24/7 சேவையை நோக்கிச் சென்று கொண்டிருக்கும்போது, விடுமுறைகளை அதிகரித்துக்கொண்டே செல்வது என்பது பின்னோக்கி செல்வதாகாதா? தமிழ்நாட்டின் மக்கள்தொகையில், 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி 87.6% இந்துக்கள். அதாவது, 8இல் ஒருவர் பிற சமயத்தவர். அப்படியானால், இதைப் பொதுவான விடுமுறையாக அளிக்காத நிலையில், இந்துக்கள் அனைவருமே விடுப்பு எடுத்தாலும்கூட 8இல் ஒருவர் பணிக்கு வருவார் என்பதுதானே எதார்த்தம்? இந்துக்களிலும்கூட, வீட்டில் துக்கம் நிகழ்ந்திருந்தால் தீபாவளி போன்ற பெரிய பண்டிகைகளையே கொண்டாடாமல் இருக்கிற நடைமுறை உண்டு. ஆக, எந்தப் பண்டிகைகையுமே 15-20% பேர் கொண்டாடாமல் இருக்கிற வாய்ப்பு உள்ளது. கொண்டாட்டமும் இல்லாததால் வீட்டில் இருப்பதும் அவர்களுக்குத் தண்டனையாகவே அமையும். அந்த நாளைத் தங்கள் தேவைக்கு விடுப்பாக எடுக்க முடியும் என்றால், பணிக்கு வருவதையே அவர்கள் விரும்புவார்கள். அவர்கள் பணிக்கு வருவதால் அலுவலகங்கள், தொழிற்சாலைகள் ஆகியவை தொடர்ந்து இயங்கும். அவ்வளவு குறைந்த பணியார்களைக் கொண்டு இயங்குவது சாத்தியமா? கொரோனா லாக் டவுன் காலத்தில், குறைந்த பணியாளர்களைக் கொண்டு(ஸ்கெலிட்டன் ஸ்டாஃப்) எல்லாமே இயங்க முடிந்ததே? அதுவும், ஓரிரு நாட்கள் அல்ல, மாதக் கணக்கில்!

இதில், ஒரு சமயத்தின் பண்டிகைக்கு விடுமுறை அளிப்பதாலேயே, பிற சமயங்களின் பண்டிககைகளுக்கும் விடுமுறை அளிக்கவேண்டியது அவசியமாகி விடுகிறது. 2011 கணக்கெடுப்பின்படியே, தமிழகத்தில் 5.86% கிறித்தவர்களும், 0.12% இஸ்லாமியர்களும் இருக்கிறார்கள் எனும்போது, அந்த சமயங்களின் பண்டிகைகளுக்கான விடுமுறைகளில், முறையே 84.14%, 99.88% பேர் பண்டிகையுமின்றி, தேவையுமின்றி விடுமுறையில் இருக்கிறார்கள். முன்பே குறிப்பிட்டதுபோல, இந்த நாட்கள் அவர்கள் விரும்பியபோது எடுத்துக்கொள்ளும் விடுப்பாக எடுத்துக்கொள்ள முடியும் என்றால், இந்த விடுமுறைகள் ரத்து செய்யப்படுவதை, பிற சமயத்தவர்கள் மட்டுமின்றி, அந்தந்தச் சமயம் சார்ந்தவர்களே வரவேற்பார்கள் என்பதுதான் உண்மை நிலை.

அதனால், சமயம் சார்ந்த விடுமுறைகள் அனைத்தையும் ரத்து செய்து, அவற்றை ஊழியர்கள் எடுத்துக்கொள்ள அனுமதிக்கும் தற்செயல் விடுப்புக் கணக்கில் சேர்ப்பது என்பது, ஊழியர்களுக்கும் உதவியாகவும், நிர்வாகம், உற்பத்தி முதலானவற்றுக்கும் பயனுள்ளதாகவும் அமையும். கவனிக்க வேண்டியது என்னவென்றால், ஏற்கெனவே இருக்கிற ஆர்எல் என்னும் சமயம் சார்ந்த விடுப்பு. விடுப்பு எடுக்கிற நாளின்மீது எப்போது எடுக்கலாம் என்பதான கட்டுப்பாடுகள் விதிப்பது, அதற்கு விடுமுறையாகவே இருக்கட்டும் என்ற உணர்வைத் தோற்றுவித்துவிடும். அதனால், அப்படியான கட்டுப்பாடுகள் இன்றி, விடுப்புக் கணக்கில் வரவுவைக்க வேண்டும். சொல்லப்போனால், சுதந்திர நாள், குடியரசு நாள், காந்தி பிறந்தநாள் ஆகியவற்றைத் தவிர, மற்ற அனைத்து விடுமுறை நாட்களையும் ரத்து செய்துவிட்டு, ரத்து செய்யப்பட்ட எண்ணிக்கைக்கு சமமான நாட்களை ஊழியர்களின் விடுப்புக் கணக்கில் வரவு வைத்தல் என்பது, மிகப்பெரிய முன்னேற்றமாக இருக்கும்.

இவை மட்டுமின்றி, இந்த அறிவிக்கப்பட்ட விடுமுறை நாட்கள், மக்களுக்கும் அரசு ஊழியர்களுக்குமான இடைவெளியையும் அதிகரிக்கின்றன. ஒரு வேலைக்காக அரசு அலுவலகத்து வருகிற மக்கள், அன்று அரசு விடுமுறை என்று தெரியும்போது, தங்கள் வேலை நடக்கவில்லை என்ற வருத்தத்தில், இவர்களுக்கெல்லாம் ஊதியத்துடன் விடுப்பு வழங்கப்படுகிறது என்ற வெறுப்பாகவே மாற்றிக் கொள்கிறார்கள். குறைந்த ஊழியர்களுடன் அலுவலகம் இயங்கினால், அவர்கள் பணியை செய்து தரவேண்டிய ஊழியர் இல்லையென்றாலும், அவர் அவரது விடுப்பில் சென்றிருக்கிறார் என்ற உணர்வே ஏற்படும். எனவே, விடுமுறைகளை ரத்து செய்வது என்பது, ஊழியர்களுக்கு மட்டுமின்றி, எல்லா நாட்களிலும் அலுவலகம் திறந்திருக்கிறது என்ற வகையில், மக்களுக்கும் மகிழ்ச்சிக்குரியதாகவே இருக்கும். சொல்லப்போனால், வழக்கமான வார விடுமுறை நாட்களில்கூட அலுவலகத்தைத் திறக்கவும், அந்நாட்களில் பணிக்கு வருபவர்களுக்கு கூடுதல் விடுப்பு உள்ளிட்ட பலன்களைத் தந்து ஊக்குவிக்கவும் வேண்டிய காலகட்டத்திற்கு நாம் வந்திருக்கிறோம். ஸ்டாலினின் நாட்காட்டியையேகூட, தற்போதைய காலத்திற்கேற்ற மாற்றங்களுடன் நடைமுறைப்படுத்தினால், மிகப்பெரிய வளர்ச்சியை அடையலாம்!

குறிப்பிட்ட சிலரை திருப்திப்படுத்துவதற்காக, தைப்பூசம் போன்று புதிய புதிய சமயம் சார்ந்த விடுமுறைகளை அறிவிப்பது, நிச்சயம் முற்போக்கான நடவடிக்கை அல்ல. பல்வேறு தளங்களிலும் இந்தியாவின் முதல் மாநிலமாகத் திகழ்கிற தமிழகம், சமயம் சார்ந்த விடுமுறைகளை விடுப்புகளாக மாற்றுகிற நடவடிக்கையையும் எடுத்து, வளர்ச்சிக்கான வழியில் மற்றொரு அடியினை எடுத்துவைத்து, மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக மாறவேண்டும்!

Wednesday, January 13, 2021

பொங்கல் வாழ்த்துகள்!

கால் நூற்றாண்டுக்குமுன் வரை எழுத்தாளராவது அவ்வளவு சுலமல்ல...
யார் வேண்டுமானாலும் எழுதலாம், ஆனால், வெளியிடுவது பதிப்பகங்கள் ஏற்றால்தான் நடக்கும். அதனால், வெளியானால்தானே எழுத்தாளர்?

இதனை, வலைப்பூக்கள்() மாற்றியமைத்தன. அப்போதுகூட, ஒரு செய்தியை சிறிய கட்டுரையாகவாவது எழுதித்தான் பதிப்பித்துக் கொண்டிருந்தார்கள்..

அதன்பின் மைக்ரோ ப்ளாக்கிங் என்ற வகையில் ட்விட்டர் போன்றவை வந்தன. மொபைல் சேவையின் குறுஞ்சேவை வசதியைப் பயன்படுத்தியதால் 2006இல் வந்த ட்விட்டர், 2004 உருவாகியிருந்த முகநூலைவிட அதிகம் பரவியிருந்தது. ஆண்ட்ராய்ட் மொபைல்களின் வரவுக்குப் பின்னர், முகநூல் அடைந்த வளர்ச்சியும், 140 எழுத்துகளுக்குட்பட்ட குறுஞ்செய்தியை இணையம் இல்லாதவர்களுக்கும் வழங்கும் சேவை என்ற இடத்தைக் கைவிட்டு ட்விட்டர் அடைந்த புதிய வடிவமும், மைக்ரோ ப்ளாக்கிங், எழுதுதல் போன்ற எதைப் பற்றியும் அறிந்திருக்கவேண்டிய அவசியமே இன்றி, எல்லோரையும் எழுத்தாளராக்கிவிட்டன.



பதிப்பாளர்கள் மட்டுமே பதிப்பித்தவரை, அவர்களிடமே பிழை சரிபார்ப்பவர் இருப்பார், எழுத்துப் பிழைகள், இலக்கணப் பிழைகள் ஆகியவற்றுடன், பதிப்பாளரே கருத்துப் பிழைகள், தரம் ஆகியவற்றைப் பரிசீலித்தபின்தான் வெளியிட ஏற்பார் என்ற கட்டுப்பாடுகள் இல்லாமற்போயின. யார் எழுதினாலும் யாருடைய மதிப்பீடும், உதவியும் தேவையின்றி அவர்களே வெளியிட்டுக்கொள்ளலாம் என்ற நிலை, அவர்களேகூட சரிபார்க்காமல் வெளியிடுகிற அவசரத்தையும்கூட உருவாக்கிவிட்டது. அதனால்தான், சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகளில் - பதிவுகளில் இலக்கணப் பிழைகள் ஏராளமாகக் காணப்படுகின்றன.

பொருட் பிழைகள் என்று நான் கருதுவதில்லை. ஏனென்றால் அவரவர்க்குச் சரி என்று பட்டதைத்தானே எழுதிகிறார்கள்? நம் பார்வையில் தவறு என்பதற்காக அதைப் பொருட்பிழை என்று அழைப்பது நியாயமாகாது.

ஆனால்....

மிகமோசமான, நாகரிகமற்ற சொற்களின் பயன்பாடு.... குறிப்பாக, பாஜக, மோடி ஆகியோரை விமர்சிப்பவர்களுக்கு, அவர்களை ஆதரிப்பவர்கள் எழுதும் பதில்கள் எப்போதுமே, எழுதிய மனிதரின் தனிப்பட்ட வாழ்க்கையைம், ஒழுக்கத்தையும், நாக்கூசும் சொற்களால் விமர்சிப்பதாகவே இருக்கின்றன.

என் கருத்து என்னவென்றால், நம்மை ஒரு 'மனிதர்' திட்டுகிறார் என்றால், அதற்கு அவர் பயன்படுத்தும் சொற்கள், அவரது தரத்தைத்தான் காட்டுமே நம் தரத்தை அல்ல... நாமே ஒருவரைத் திட்டவேண்டி வந்தால்கூட, நமக்குத் தெரிந்த சொற்களைத்தானே பயன்படுத்துவோம்? அதனால், நம்மைப் பற்றி மற்றவர்கள் என்ன சொல்லித் திட்டினார்கள் என்பதற்காகக் கவலைப்பட வேண்டியதில்லை.

அடுத்து... நாய் குரைக்கிறது. நாம் திருப்பிக் குரைப்போமா? திருப்பிக் குரைத்தால் நாமும் நாயாகிவிடுவோம். நாய் குரைக்கும்போது நமக்கு அதன்மீது பெரிதாகக் கோபம் வருவதி;ல்லையே, ஏன்? ஏனென்றால் அது விலங்கு, நமக்குச் சமமமானதல்ல, நம்மைவிடத் தாழ்ந்தது என்று நமக்குப் புரிந்திருக்கிறது. அசிங்கமான சொற்களைப் பதிவிடுபவர்கள் அத் தரத்தவர்கள்தான்!

அப்படிப் பார்க்கத் தொடங்கிவிட்டால், அவர்களுக்கு பதிலளிப்பதை – பதிலுக்குக் குரைப்பதை – நாமும் நிறுத்திவிடுவோம். மாறாக, நம்மில் பலர், அவர்களுக்கு அவர்களின் மொழியில் - அதாவது அசிங்கமான சொற்களால் பதிலளிக்கத் தொடங்கிவிடுகிறார்கள். அதாவது, நாமும் குரைக்கத் தொடங்கிவிடுகிறோம். பதிலுக்குக் குரைத்தால், குரைப்பதை நாய் நிறுத்துமா? அதிகமாகத்தானே குரைக்கும்? அதனால்தான், முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களில், அசிங்கமான சொற்களாலான பதிவுகளை ஏராளமாகக் காண முடிகிறது.

மாற்றாக....
1.    பதில் அளிக்காமல் அத்தகையோரை கண்டுகொள்ளாம் விடலாம்
2.    அத்தகைய பின்னூட்டங்களை நீக்கிவிடலாம்
3.    மோசமான மொழி என்று முகநூலில் புகார் செய்து அந்த பதிவை, பின்னூட்டத்தை நீக்கலாம்
4.    தொடர்ந்து மோசமான மொழி உள்ளிட்ட பதிவுகளைச் செய்பவர்களை முகநூல் முடக்கிவிடுகிறது. அதற்குத் தொடர்ந்து புகாரளிக்கலாம்.
இவற்றால்...
1.    நம் பதிவுகளில் உணர்ச்சிவசப்பட்டு தரம்தாழ்ந்த மொழி இடம்பெறாது
2.    உணர்ச்சிவசப்படுத்தும் பதில்களால்-பதிவுகளால் திசைதிரும்புவது தவிர்க்கப்பட்டு,  சொல்லவேண்டிய செய்திகளை தவறாமல் சொல்லலாம்.
3.    சமூக ஊடகங்களில் பரவிக்கொண்டிருக்கும் அசிங்கமான தமிழை ஒழிக்கலாம்...

நமக்காக, நாம் பேச வேண்டிய அரசியல்-பொருளாதார-சமூக பிரச்சினைகளிலிருந்து திசை திரும்பாலிருப்பதற்காக, நம் தமிழின் தரத்தைக் காப்பதற்காக இவற்றைச் செய்வோம் என்று தமிழரின் புத்தாண்டான தைத்திருநாளிலில் உறுதியேற்போம் என்று வாழ்த்தி மகிழ்கிறேன்!


வாழ்த்துகளுடன்,
அறிவுக்கடல்


Tuesday, January 5, 2021

அரசு உத்தரவும், அரசரின் உத்தரவும்!

          நாடுகளை முடியரசர்கள் ஆண்ட காலத்தில், அரசர் எடுப்பதுதான் முடிவு. அமைச்சர்கள், அவையோர் உள்ளிட்டோரை அரசர் கலந்தாலோசிப்பதையும், ஆலோசிக்காமல் தவிர்ப்பதையும் யாருமே கேள்வி கேட்க முடியாது. ஆலோசித்தாலும், அனுபவமுடையோரின் கருத்தையோ, பெரும்பான்மையினரின் கருத்தையோ அரசர் ஏற்கவேண்டுமென்ற அவசியமில்லை. சொல்லப்பட்ட ஆலோசனைகளுக்கு நேர்மாறாகக்கூட அரசரின் முடிவு இருக்கலாம்.

              அதனை அரசர் மட்டுமே தனிப்பட்டு எடுப்பதால், அக்காலத்திய அரசு(அரசரின்!) உத்தரவுகள், 'நான் உத்தரவிடுகிறேன்...', 'நான் அறிவிக்கிறேன்...' என்பனவற்றைப் போன்ற, செய்வினை வாக்கியங்களாகவே இருக்கும்.

           ஆனால், மக்களாட்சி என்ற அமைப்பு உருவானபின், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அவை எடுப்பதுதான் முடிவு. மக்களாட்சி நடைபெறுகிற எல்லா நாடுகளிலும், பிரதமர், குடியரசுத் தலைவர் உள்ளிட்ட அரசுத் தலைவர் எவரும், நாடாளுமன்றம் போன்ற ஆளும் அவையை கலந்தாலோசிக்காமலோ, மீறியோ தனிப்பட்டு எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ள முடியாது.

               அதனாலேயே, இக்காலத்திய அரசு உத்தரவுகள் அனைத்தும் 'உத்தரவிடப்படுகிறது...', 'முடிவெடுக்கப்பட்டுள்ளது...' என்பதான செயப்பாட்டுவினை வாக்கியங்களாகவே இருக்கும். உண்மையில், அனைத்து குடிமக்களையும் மனிதர்களாக மதிக்கும் நாகரிக வளர்ச்சியின் வெளிப்பாடே, தான் மட்டும் உயர்ந்தவர் இல்லை என்பதை ஏற்று, பொதுவான முடிவாக வெளியிடுதல்.

              இந்த மரபு, தமிழ்நாட்டில் ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பேற்றபின் மாறியது. யாரையும் ஆலோசிக்காமல், யாரையும் மதிக்காமல் முடிவுகளை அவர் உண்மையிலேயே தனிப்பட்டுதான் எடுத்தார் என்றாலும்கூட, அரசுக்கு இருக்கிற நடைமுறைகளை மாற்றியது அருவருக்கத்தக்கதாகத்தான் இருந்தது. இந்தச் சமூகத்தில் பெண்கள் சந்திக்கிற அடக்குமுறைகளை அனைவரும் அறிந்திருக்கிற நிலையில், திரைத்துறையில் பெண்கள் சந்திக்கிற நெருக்கடிகள் அதிகம் என்பதும் புரிந்தே இருக்கிறது. அப்படியான மோசமான அனுபவங்களினால், ஆண்களின் ஆதிக்கத்தை எதிர்ப்பதாகக் கருதிக்கொண்டு ஜெயலலிதா இப்படியான தவறான நடைமுறையைக் கையாண்டார் என்றுதான் கருத வேண்டியிருந்தது. அதாவது, அவர் வாழ்வில் சந்தித்த கொடுமைகளுக்கான எதிர்வினை என்று கூறுமளவுக்கு சிறிய நியாயமாவது(ஏற்க முடியாவிட்டாலும்) அவர் பக்கம் இருந்தது.

          


       ஆனால், அவருக்குப்பின் ஆட்சியைத் தொடர்கிறவர்கள் இன்றுவரை 'நான் உத்தரவிடுகிறேன்...'  என்பதான செய்வினை வாக்கியங்களையே அரசின் தகவல் தொடர்புகளில் பயன்படுத்துகிறார்கள். இதை அதிகார மமதை என்று கூறுவதைவிட, தமிழ் இலக்கணம், அரசின் மரபுகள் உள்ளிட்ட எதையுமே அறிந்திராத அறியாமை என்றுதான் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. உண்மையிலேயே முதல்வருடைய நலம் விரும்பிகள் யாராவது இருந்தால், தயவு செய்து எடுத்துச் செல்லுங்களேன்...!


Monday, January 4, 2021

கலி முத்திடுச்சு...!


          அனேகமாக எல்லா பெரிய பிரச்சினைகளுக்கும் சொல்லப்படுகிற பதில்...! 'அந்தக் காலத்துல...' என்று தொடங்கி, தொழில்நுட்ப வளர்ச்சியால் எல்லாமே சீரழிந்துவிட்டதாகப் புலம்புபவர்கள், தலைமுறை வேறுபாடின்றி காணப்படுகிறார்கள்.

          இளைஞர்கள்கூட, 'அந்தக் காலத்துல எவ்வளவு ஹெல்தியா இருந்தாங்க...' என்று பேசுவதைக் கேட்க முடிகிறது. தாத்தாக்களின் ஆரோக்கியத்தைப் பார்த்துப் பிரமிக்கிற அந்த இளைஞர்கள் தாத்தாவுடனோ, தாத்தாவின் அப்பாவுடனோ பிறந்தவர்கள் எத்தனைப் பேர் என்பதைக் கேட்டாலே பாதி உண்மை புரிந்துவிடும். இன்றைக்கு நாற்பதுகளைக் கடந்த யாராக இருந்தாலும், அவர்கள் தாத்தாவுடன் பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறந்ததாகவும், 3-4 பேர் தவிர மற்றவர்கள் குழந்தையிலேயே இறந்துவிட்டதையும் கேட்டிருப்பார்கள்.

           இன்றைக்கிருக்கிற மருத்துவ வசதிகளும், அறிவியல் முன்னேற்றங்களும் ஏற்பட்டிராத அக்காலத்தில், தாத்தா வயது வரை தப்பியவர்கள் மிகுந்த ஆரோக்கியம் பெற்றிருந்தவர்கள் மட்டுமே. சிறிய நோய்களால் தாக்கப்படுபவர்களைக்கூட காப்பாற்ற முடியாமலேயே அவ்வளவு பேரும் இறந்திருப்பார்கள். விடுதலைப் பெற்றபோது, குழந்தை இறப்பு விகிதம் 1000க்கு 200க்கும் அதிகமாக இருந்ததிலிருந்து, 2015இல் 38ஆகக் குறைந்திருக்கிறது. 1960இல் 41 ஆண்டுகளாக இருநத சராசரி வாழ்நாள், 2015இல் 68ஆக உயர்ந்திருக்கிறது. இவ்வளவும், இன்றைக்கு உற்பத்தி செய்யப்படும் உணவுப் பயிர்கள் சத்து இல்லாதவை, எல்லாம் நஞ்சு என்ற விமர்சனங்களுக்கிடையேதான் என்பதுதான் கவனிக்க வேண்டியது.

          சத்து இல்லை என்பது பழைமையிலிருந்து வெளிப்படத் தயாராக இல்லாத மனநிலை மட்டுமே என்பதற்கு இந்தப் புள்ளிவிபரங்களே சான்று. அத்துடன், இன்றுவரை உருவாகியுள்ள தொழில்நுட்பங்களே, கொரோனா வைரசின் வடிவத்தை மட்டுமின்றி, அதன் மரபணுக் கட்டமைப்பையே பார்க்குமளவுக்கு வசதி ஏற்படுத்தி, சிகிச்சைக்கு உதவி, உயிரிழப்புகளைக் குறைத்து, தடுப்பு மருந்துகளை இவ்வளவு விரைவில் உருவாக்குவதையும் சாத்தியமாக்கியிருக்கின்றன என்றால் மிகையல்ல.

          ஆனால், இன்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது என்ற குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. புதிதாக எது உருவானாலும், நல்ல, கெட்ட என்ற இரு விளைவுகளும் இருக்கும். நல்ல விளைவுகளுக்காக அந்தத் தொழில்நுட்பம் உருவாக்கப்படும்போது, பக்க விளைவாக கெட்டவையும் ஏற்பட்டாலும், அவற்றை எதிர்கொள்வதற்கான தொழில்நுட்பங்களும், அவற்றைப் பற்றிய முழு விபரங்கள் கிடைத்தபின் உருவாகிவிடும் என்பதுதான், காலம் காலமாகத் தொடரும் நடைமுறையாக உள்ளது. அதற்குள் அவசரப்பட்டு தொழில்நுட்பத்தைக் குற்றவாளிகள் ஆக்குபவர்களை, பழைமை விரும்பிகள் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும்.

        எளிய தொழில்நுட்பங்களையே கண்டு அஞ்சுபவர்களிடையே, செயற்கை நுண்ணறிவு(ஆர்ட்டிஃபிஷியல் இண்ட்டெலிஜென்ஸ்) அதிக அச்சத்தை ஏற்படுத்துகிறது என்றால் மிகையல்ல. எந்திரங்களும், மனிதர்களும் போரிடுவதாக ஆங்கிலப் படங்கள் கற்பனை செய்தால், அது உண்மையிலேயே நடக்கும் என்று அஞ்சுபவர்களையும் ஏராளமாகக் காணமுடிகிறது. ஆனால், எந்தத் தொழில்நுட்பமாக இருந்தாலும், உருவாக்குபவரின் நலனுக்காத்தான் என்பதால், உருவாக்கும் மனிதர்களுக்கு நலன் பயப்பதாகவே இருக்கும். 

அதற்கான சில உதாரணங்கள் இங்கே:

           தற்போது ஓட்டுனர் இல்லாத, தானியங்கி கார்களை நோக்கித்தான் ஆய்வுகள் சென்று கொண்டிருக்கின்றன. அவற்றின் சிறப்பான செயல்திறனால், 15 சதவீதம்வரை எரிபொருள் சேமிக்கப்படுவதாகவும், அதனால் சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய நன்மை விளையவிருப்பதாகவும் அருகாமை கால ஆய்வுகள் தெரிவிக்கின்றன. (சிக்னலில் காவலர் இல்லையென்று சிவப்பு எரியும்போதே மனிதர்கள் செல்வதுபோல இவை செல்லாது என்பதால் மற்ற வாகனங்களுக்கும் பாதுகாப்பு அதிகம்!)

         சைட்வாக் லேப்ஸ் என்ற நிறுவனம், போக்குவரத்தைக் கட்டுப்படுத்தும் செயற்கை நுண்ணறிவை உருவாக்கியுள்ளது. ஒரு நகரின் அனைத்துப் பகுதிகளின் போக்குவரத்தையும் பரிசீலித்து, குறைவான நெருக்கடியுள்ள பாதைகளில் வாகனங்களைத் திருப்பி விடுவதன்மூலம், எரிபொருள் சிக்கனமாவதால், சுற்றுச் சூழல் மாசுபாட்டை இது குறைக்கிறது.

       சீனாவுக்காக ஐபிஎம் உருவாக்கியுள்ள ஸ்மார்ட் ஹொரைஸான் என்ற செயற்கை நுண்ணறிவானது, போக்குவரத்து, கட்டுமானம், தொழிற்சாலைகள் ஆகியவற்றின் தரக் கட்டுப்பாடுகளைக் கண்காணிப்பதன்மூலம், பீஜிங் நகரின் காற்று மாசுபாட்டை 35 சதவீதம் குறைத்திருக்கிறது.

         கூகுள் பயன்படுத்தும் டீப்மைண்ட் என்ற செயற்கை நுண்ணறிவு, காலநிலைகளைக் கண்காணித்து தேவையான மாற்றங்களைச் செய்வதன்மூலம், கூகுளின் டேட்டா செண்ட்டர்களைக் குளிர்விப்பற்குத் தேவையான எரிசக்தியில் 35 சதவீதத்தை சேமிக்கிறது.

         சென்னை ஐஐடி உருவாக்கியுள்ள ஸ்மார்ட் டஸ்ட்பின்ஸ் என்ற குப்பைத் தொட்டிகள், குப்பையின் அளவை, சேகரிக்கும் வாகனத்திற்குத் தெரிவிக்கின்றன. இதன்மூலம் முக்கால் பாகத்திற்கும் அதிகமாகக் குப்பை சேராத குப்பைத் தொட்டிகளுக்கு, குப்பையைச் சேகரிக்க வாகனங்கள் வரவேண்டியதில்லை என்பதால் எரிபொருள் மிச்சமாவதுடன், சுற்றுச்சூழலும் காக்கப்படுகிறது.

         ட்ரோன்களைப் பயன்படுத்திச் செயல்படும் ஏர்லிட்டிக்ஸ் என்ற செயற்கை நுண்ணறிவு, விவசாயத்திற்கு உதவுகிறது. காற்றில் உள்ள ஈரப்பதம், கார்பன்-டை-ஆக்சைடு ஆகியவற்றின் அளவு, மண்ணின் தன்மை, பயிரின் ஆரோக்கியம் ஆகியவற்றைக் கண்காணிப்பதன்மூலம், பயிர் சிறப்பாகப் பராமரிக்கப்பட்டு, அதிக மகசூல் கிடைக்கிறது.

         காலநிலை மாற்றங்களை கவனிக்க உருவாக்கப்படும் கற்கும் திறனுள்ள செயற்கை நுண்ணறிவுக் கருவிகள், காற்று மாசுபாட்டை மட்டுமின்றி, எதனால் அதிகரிக்கிறது என்ற ஆய்வையும் செய்து, எவற்றைக் கூட்டலாம், குறைக்கலாம் என்ற அறிவுரைகளையும் தரவிருக்கின்றன.

இவை புதிய தொழில்நுட்பங்களுக்கு சில 'சாம்ப்பிள்கள்' மட்டுமே! அதனால், அடுத்தமுறை, யாராவது தொழில்நுட்பங்களால் தீமை என்று சொல்லும்போது, அப்படியே நம்பாமல், சற்றே சிந்திக்கவும், படிக்கவும் முயற்சிப்போம்! எல்லா தொழில்நுட்பங்களைப் பற்றியும் தகவல் சொல்ல இணையம் எப்போதும் தயாராகவே உள்ளது!


 

Thursday, December 31, 2020

வரவேற்கிறோம், ரஜினி சார்!

         சிவாஜிராவ் கெய்க்வாட்....! வந்தாரை வாழவைக்கும் தமிழகத்துக்கு வந்து, ரஜினிகாந்த் என்ற பெயரில் வாழ்வாங்கு வாழ்ந்துகொண்டிருப்பவரின் இயற்பெயர்! கர்னாடக மாநிலத்தில் பிறந்த மராட்டியர் என்ற பேதத்தைத் தமிழர்கள் என்றுமே அவரிடம் காட்டியதில்லை. அவருக்கு மட்டுமில்லை, எவருக்குமே தமிழர்கள் பேதம் காட்டியதில்லை என்பதுதான், தமிழகத்தின் சிறப்பு!

      1975இல் தமிழில் வெளியான அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில்தான் ரஜினி அறிமுகமானார். தமிழ் மட்டுமின்றி, கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் சேர்த்து 1979க்குள் 50க்கும் அதிமான படங்களில் நடித்து, பொருளும், புகழும் ஈட்டினாலும்கூட, மன அமையின்றி, திரைத்துறையைவிட்டு விலகும் முடிவை ரஜினி எடுத்தார். பாலச்சந்தர் உள்ளிட்டோரின் முயற்சியால் அம்முடிவு மாற்றப்பட்டபின் வெளியான முதல் படமான பில்லா, ரஜினியின் திரைவாழ்க்கையின் இரண்டாவதும், மிக வெற்றிகரமானதுமான அத்தியாயத்தைத் தொடங்கிவைத்தது. வணிக அடிப்படையில் மிகப்பெரிய வெற்றியடைந்த முதல் ரஜினி படமாக அமைந்த பில்லா, தமிழின் உச்ச நட்சத்திரமாக மட்டுமின்றி, தென்னிந்தியாவின் மிகமுக்கிய நடிகராகவும் ரஜினியை உயர்த்தியது. இதில் தொடங்கி, 2007இல் ஆசியாவின் மிகஅதிக ஊதியம் பெறும் நடிகர்களில் இரண்டாவது இடம் என்ற எட்ட முடியாத இடம்வரை அளித்தவை தமிழ்ப் படங்களும், அவற்றை வெற்றிகரமாக்கிய தமிழர்களும்தான்.

        தொண்ணூறுகளில் வெளியான ரஜினி படங்கள், ரசிகர் மன்றத்தினர் பார்த்தாலே ஆறு வாரங்களுக்கு அரங்கு நிறைந்துவிடும்(ஹவுஸ்ஃபுல்) என்ற நிலைக்கு வளர்ந்திருந்தார் ரஜினி. 42 நாட்கள் ரசிகர்களால் மட்டுமே அரங்கு நிறையும்போது, 50 நாட்களைக் கடப்பதில் சிரமம் எதுவும் இல்லையென்பதால், எல்லாப் படங்களுமே 50 நாட்களைக் கடக்கும் என்ற அளவுக்கு நம்பிக்கையைப் பெற்றிருந்தார். அதைத்தான் அவரது செல்வாக்கு என்று மற்றவர்கள் அவரை நம்பச் செய்தனர். ஆம்! செல்வாக்குதான்! ஆனால், அது நடிகராக மட்டுமே!

     வெற்றிகரமான நடிகர் என்ற நிலையிலிருந்து, முதலமைச்சராகி, இறக்கும்வரை அப்பதவியில் தொடர்ந்த எம்ஜிஆரின் வாழ்க்கைதான், திரைத்துறையைச் சார்ந்த பலருக்கும், முதலமைச்சர் கனவை உருவாக்கக் கூடியதாக இன்றும் திகழ்கிறது. யார் யாரோ ஆசைப்படும்போது, தமிழ்த் திரையுலகில் வேறு எவரும் எட்ட முடியாத உச்சத்தைத் தொட்டவரான ரஜினியால் முடியாதா என்று சிலர் எண்ணினர். எண்ணியவர்கள் ரஜினியின் நலம் விரும்பிகள் அல்லர். ரஜினி முதலமைச்சரானால், தங்கள் வளர்ச்சிக்கு உதவும் என்று தங்களின் நலத்தை விரும்பியவர்கள் என்பதைப் புரிந்துகொள்ள ரஜினியால் முடியவில்லை.

       ஒரு தொழிற்சங்கம் இருக்கிறது வைத்துக்கொள்வோம்... தொழிற்சங்கம் என்றால், கழகங்களின் தொழிலாளர் அணிகளை எடுத்துக்கொள்ளக்கூடாது... சிஐடியு, ஏஐடியுசி போன்வற்றை எடுத்துக்கொள்ளவேண்டும். அவற்றின் உறுப்பினர்கள்தான் சிபிஎம், சிபிஐ கட்சிகளின் உறுப்பினர்களாக இருக்கவேண்டுமென்ற கட்டுப்பாடு கிடையாது. தொழிலாளர்கள் என்ற அடிப்படையில் ஒன்றுபட்டிருந்தாலும், அவர்களின் அரசியல் நிலைப்பாடு வேறாக இருக்கும். தொழிலாளராக அவர்களின் வாழ்க்கைக்கே கேடு விளைவிக்கும் ஆட்சிக்கு எதிராகப் போராடினாலும், தங்களுக்குப் பிடித்த கட்சி என்ற அடிப்படையில் ஆளும் அதே கட்சிக்கு தேர்தலில் வாக்களிப்பார்கள். அதைப் போலத்தான், ரஜினியின் ரசிகர்களும். ரஜினி என்ற நடிகருக்குத்தான் ரசிகர்களே தவிர, அவர்களுக்கு தனிப்பட்ட அரசியல் நிலைப்பாடு இருக்கும். இந்த உண்மையைத்தான் ரஜினி உணரவில்லை.

         எம்ஜிஆர் மட்டும் முதல்வராக எப்படி முடிந்தது என்பதுதான் உடனடியாகச் சுட்டப்படும் உதாரணம். உண்மையில், எம்ஜிஆருக்கு ஓர் அரசியல் நிலைப்பாடு இருந்தது. திமுக உருவானபோது, அதன் உறுப்பினராகி, கொள்கைகளுக்காகப் பிரச்சாரம் செய்து என்று அவருடைய அரசியல் வாழ்க்கை எப்போதோ தொடங்கிவிட்டது. தன் திரைப்படங்களிலும்கூட தனது அரசியல் நிலைப்பாட்டைத் தொடர்ந்து பேசிவந்த நிலையில், வெறும் ரசிகர்களாக இன்றி, கொள்கைக்காக அவர் படங்களை வெற்றியடையச் செய்யும் அளவுக்கு மக்களின் செல்வாக்கு அவருக்கு உருவாகியிருந்தது. தான் நம்பிய கட்சி, தன் நிலைப்பாட்டுக்கு மாறாகச் செயல்படுகிறது என்று அவர் வெளியே வந்தபோது, ஏற்கெனவே அவருடைய அரசியல் நிலைப்பாட்டைப் பின்பற்றுபவர்கள் ஏராளமாக இருந்தனர் என்பதே அவரது வெற்றிக்கு அடிப்படையாக அமைந்தது. பெரியார் உருவாக்கியிருந்த விழிப்புணர்வு, அதனால் தமிழர்களின், தமிழகத்தின் வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு உருவாகியிருந்த திமுக, அது இளைஞர்களிடையே ஏற்படுத்தியிருந்த எழுச்சி ஆகியவற்றின் அறுவடையே எம்ஜிஆரின் வெற்றி. இந்த வேறுபாடு புரியாமல், திரையில் நடித்த வேடங்களுக்காக மட்டும் மக்கள் எம்ஜிஆரைத் தேர்ந்தெடுத்ததாக நம்பியவர்கள்தான், ரஜினியைக் குழப்பினார்கள். குழப்பமடையாமலிருக்கும் அளவுக்குத் தெளிவான புரிதல் ரஜினிக்கு இல்லாமற்போனது.

        அருவருக்கும் அளவுக்கு நடைபெற்ற 1991-96 ஜெயலலிதா ஆட்சி, அதுவரை தமிழத்தில் நடைபெற்ற அரசியலே தவறோ என்ற எண்ணத்தை மக்களிடையே தோற்றுவித்திருந்தது. அப்படியான நிலையில்தான், ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்று தூண்டப்பட்டார். அதற்கு அவர் தயாராக இல்லையென்றாலும், ஆசை யாரை விட்டது என்ற நிலையிலும் இருந்தார். ஏற்கெனவே எம்ஜிஆராலும், பின்னர் ஜெயலலிதாவாலும்கூட அவமானப்படுத்தப்பட்ட உணர்வுடன் இருந்ததால், 'ஆண்டவனால்கூட தமிழகத்தைக் காப்பாற்ற முடியாது' என்ற புகழ்பெற்ற சொற்களை உதிர்த்தார் ரஜினி. எப்படியானாலும் தோற்றுவிடுமளவுக்கு ஜெயலலிதா ஆட்சி புரிந்திருந்த நிலையில், ரஜினியின் பேச்சுதான் ஜெயலலிதாவைத் தோற்கடித்தது என்று ரஜினிக்குச் சொல்லப்பட்டது. புகழுக்கு மயங்காதார் உண்டா? ஏற்கெனவே, நடிப்பு வேறு, நடைமுறை வாழ்க்கை வேறு என்பதைப் புரிந்துகொள்ள முடியாத நிலையிலிருந்த ரஜினி, எளிதாக ஏமாந்தார். அடுத்தடுத்து அவர் பேசியவற்றுக்கு ஊடகங்கள் அளித்த முக்கியத்துவம், மக்கள் செல்வாக்கு என்று அவருக்குச் சொல்லப்பட்டாலும், மண்குதிரையை நம்பி ரஜினி கடைசிவரை ஆற்றில் இறங்காதது அவரது மிகச்சிறந்த நிலைப்பாடு என்பதை மறுப்பதற்கில்லை.

        அவரது அரசியல் பேச்சுகள் தொடங்கி கால் நூற்றாண்டுத் தயக்கத்திற்குப்பின், அரசியல் வேண்டாம் என்பதான நிலையை அறிவிக்க அவர் முயற்சித்தார். சிறுநீரக மாற்று செய்திருப்பதைக் குறிப்பிட்டு, அரசியலுக்கு வந்தபின் தனக்கு ஏதாவது ஆனால் ரசிகர்கள் பாவமல்லவா என்றெல்லாம் பேசிவிட்ட ரஜினி, மீண்டும் அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவிக்க, அவருக்கு அளிக்கப்பட்ட நெருக்கடிகள்தான் காரணம் என்பது உலகறிந்த ரகசியமாக அமைந்தது. இன்றுவரை தமிழத்தை ஆண்டுகொண்டிருந்தாலும்கூட, அதிமுக அரசின் அமைச்சர்கள் உட்பட அனைவருமே, மத்தியில் ஆளும் பாஜகவின் வெளிப்படையான ஆயுதமாகவே பயன்படுத்தப்படும் சிபிஅய், வருமான வரித்துறை உள்ளிட்டவற்றிற்கு அஞ்சித்தான் கட்டுப்படுகின்றார்கள் என்பதை அவர்களே மறுப்பதில்லை. சொல்லப்போனால், ஒரு ரெய்ட் வந்தால் சரியாகிவிடும் என்று பாஜக தலைவர்கள் வெளிப்படையாகவே மிரட்டியதுகூட தமிழகத்தில் நடந்தது.

          அத்தகைய மிரட்டல்களுக்கு ரஜினி ஏன் பணியவேண்டும்? வருமான வரிக்காக வட்டித் தொழில் செய்ததாகக் கூறியது தொடங்கி, அவர் அஞ்சவேண்டிய பல குறைகள் அவரிடம் இருந்தன. திரைத்துறையினர் போன்ற பெரும் வருவாய் ஈட்டுபவர்கள் வரி நிலுவை வைப்பது என்பது வழக்கமாக நிகழக்கூடியதுதான். இதை நடிகவேள் எம்.ஆர்.ராதா பலமுறை சுட்டிக்காட்டி, தானே நிலுவை வைத்திருப்பதாகப் பொதுவெளியில் பேசவும் செய்திருக்கிறார். அதைப்போலவே, தனிப்பட்ட வரவு செலவுகளில் வாடகை நிலுவை போன்றவைகளும் யாருமே செய்யாத குற்றங்களல்ல. ஆனால், 'சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்கவேண்டும்' என்ற கூற்றைப் போல, ஆட்சியைக் கைப்பற்ற விரும்புபவர் ஒழுக்கமானவராக இருக்கவேண்டும் என்ற அடிப்படையில் இவை அனைத்தும் பொதுவெளிக்கு வந்து சந்தி சிரித்தன. அதாவது, ரஜினி எதற்காகவெல்லாம் அஞ்சினாரோ, அபராதங்களுடன் முடிந்திருக்க வேண்டிய அவை, அனைத்து மக்களுக்கும் தெரிவிக்கப்பட்டன. அவற்றால் ஏற்பட்ட தாங்க முடியாத மன உளைச்சலுக்குப் பின்னரே, வேண்டாம் என்ற தனது முடிவில் உறுதியாக நிற்கும் துணிவு அவருக்கு ஏற்பட்டிருக்கிறது.

         'பெட்டர் லேட், தேன் நெவர்'! எவ்வளவு தாமதமாக எடுக்கப்பட்டாலும் சரியான முடிவு! வரவேற்கிறோம், ரஜினி சார்! வயது பேதமின்றி அனைவரும் ரசிக்கும் கலைஞராக இருந்தவர் நீங்கள்! ஆனால், தூத்துக்குடிக்குச் சென்று வந்து, போராடிய மக்கள் குறித்து உதிர்த்த சொற்கள், சக மனிதர் என்ற இடத்தில்கூட வைத்துக்கொள்ள முடியாத அளவுக்கு வேதனையை உருவாக்கின. சிறு வயதில் உங்களை ரசித்த மனநிலையை மட்டும் நினைவில் வைத்துக்கொண்டு, வெறுப்புறும் அளவுக்கு இடையில் நிகழ்ந்தவற்றை மறக்க விரும்புகிறோம். 'நுணலும் தன் வாயால் கெடும்' என்பதைப் போல, உங்களுக்குத் தெரியாத அரசியல் துறையைப் பற்றி, மீண்டும் ஏதாவது உளறி, உங்கள் மரியாதையை மேலும் கெடுத்துக்கொள்ளாதீர்கள் என்ற வேண்டுகோளுடன், எஞ்சிய உங்கள் வாழ்நாள் நலமாக அமைய வாழ்த்துகிறோம்!

Monday, December 28, 2020

நிர்வாணப் படங்கள் அசிங்கமா?


             தாய்லாந்து அரசரின் காதலியின் நிர்வாணப் படங்கள் சில நாட்களுக்குமுன் வெளியாகின. மூன்று முறை திருமணம் செய்து, மூவரையுமே விவாகரத்தும் செய்துவிட்ட அரசர், தற்போது காதலியாக உள்ளவருக்கு பட்டத்தரசிக்கு இணையான பதவிகளை வெளிப்படையாக அளித்திருப்பது, அரச குடும்பத்திற்குள் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதன் விளைவுகள்தான் இவ்வாறு வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அவை முக்கியமில்லை. ஆனால், ஒருவரின் நிர்வாணப் படத்தை வெளியிடுவது என்பதைப் பற்றித்தான் பேச வேண்டியிருக்கிறது.

               விலங்குகள் உடை அணிவதில்லை. ஆனால், உடலின் சில பகுதிகளைக் கட்டாயம் மறைக்கும்படி உடை அணிவது என்பதுதான் விலங்குகளையும், மனிதர்களையும் வேறுபடுத்துகிறது. குழந்தைப் பருவத்தைக் கடந்துவிட்ட மனிதர்கள், நல்ல மனநிலையிலிருந்தால், பிறர்முன் ஆடைகளின்றி நடமாடாமல் இருப்பது குறைந்தபட்ச நாகரிமாக எல்லா சமூகங்களிலுமே கருதப்படுகிறது. தான் உடையுடன் இருப்பதை ஒருவர் உறுதிப்படுத்திக் கொள்ளாமல் இருப்பது தவறாகவும், அநாகரிகமாகவும் இருக்கலாம். ஆனால், பிறர் இல்லாத தனிமையிலும், தன் துணையுடன் மட்டும் தனிமையில் இருக்கும்போதும், உடையின்றியோ அல்லது  அரைகுறை உடையுடனோ இருப்பது என்பது தனிப்பட்ட உரிமை. பிறருக்குக் கேடு விளைவிக்காத தனிப்பட்ட நடவடிக்கை என்பது சமூகத்தோடு நேரடித் தொடர்பில்லாத நடவடிக்கையே. அதை பிறர் படம் எடுத்து பரப்புவது என்பது அவருடைய தவறு இல்லை. படமெடுத்தவர், பரப்பியவர் ஆகியோரின் நாகரிகக் குறைவையே அது காட்டுவதாக நான் கருதுகிறேன்.

               ஒருவரை நேரடியாக, பிரச்சினைக்குரிய செய்தியின் அடிப்படையில் எதிர்கொள்ள முடியாதபோது, அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சனம் செய்வது என்பது, தரம் தாழந்தவர்களின் நடவடிக்கையாக உள்ளது. அதிலும் குறிப்பாக, தொடர்புடையவர் பெண் என்றால், அவரது தனிப்பட்ட வாழ்க்கையைக் குறிவைத்து, தரம் தாழ்ந்த விமர்சனங்களைச் செய்வது வாடிக்கையாக உள்ளது. அந்தத் தரம் தாழ்ந்த விமர்சனங்களுடன், ரகசிய கேமரா உள்ளிட்டவற்றின்மூலம் அவர்களது தனிப்பட்ட நடவடிக்கைகள், நிர்வாணம் ஆகியவற்றைப் படமெடுத்துப் பரப்புவதை தொழில்நுட்ப வளர்ச்சிகள் இக்காலத்தில் ஏதுவாக்கியிருக்கின்றன. மேற்குறிப்பட்ட தாய்லாந்து அரச குடும்ப படங்கள்கூட எஸ்டி கார்டாகத்தான், அதாவது டிஜிட்டல் வடிவத்தில்தான் பகிரப்பட்டுள்ளன என்பது, இந்நடவடிக்கையில் தற்காலத் தொழில்நுட்பத்தின் உதவியையே காட்டுகிறது.

                உடனே தொழில்நுட்பங்கள் தவறு என்று வாதிடுவது முட்டாள்தனமானது. இத்தகைய தொழில்நுட்பங்களின் வளர்ச்சிதான், கொரோனா வைரசின் வடிவத்தைக்கூட எலெக்ட்ரான் நுண்ணோக்கி மூலம் தெளிவாகப் பார்த்து, எப்படி மனித உடலைப் பற்றிக்கொள்கிறது என்பதுவரை ஆராய்ந்து, எதிர்கொள்ள உதவி, அதன்மூலம் கடந்த காலக் கொள்ளை நோய்களைப் போன்ற அளவுக்கு உயிரிழப்பு ஏற்பட்டுவிடாமல் தடுத்திருக்கிறது.

               கவனிக்க வேண்டியது என்னவென்றால் மானம்-அவமானம் என்பதன் வரையறையில் ஏற்படவேண்டிய மாற்றமே. நம் படுக்கையறையையோ, குளியலறையையோ யாருமே பார்க்க முடியாமலிருந்த காலத்தில் என்ன வரையறை இருந்ததோ, அதையே, சட்டைப் பொத்தானைவிடச் சிறிய கேமராவைக்கொண்டு எந்த இடத்தையும் பார்த்துவிடக்கூடிய இக்காலத்தில் பின்பற்றுவது என்பது, எவருடையை நிம்மதியையும் எளிதில் பறித்துவிடும். நம் வரையில் நம் நாகரிகத்தையும், ஒழுக்கத்தையும் கடைப்பிடிப்பது மட்டுமே இன்றைய டிஜிட்டல் உலகத்தில் சாத்தியமானது. நமக்குத் தெரியாமல் நம் தனிப்பட்ட வாழ்க்கையை இன்னொருவர் படமெடுத்து, பகிரும்போது, அதில் நம் தவறு இல்லையென்பதை யாரும் மறுக்க முடியாது.

               அதெல்லாம் சரி... அசிங்கம் அசிங்கம்தானே? அசிங்கம் என்றால் என்ன? மற்றவர்கள் சரியென்று ஏற்காத, நாகரிகமற்ற ஒன்றைச் செய்வதுதான் அசிங்கம். இதைத்தான் முதலிலிருந்து விளக்கிக் கொண்டிருக்கிறேன். பொது இடத்தில் நீங்களாக உடையை அவிழ்த்தால்தான் அது அசிங்கம். யாராவது பார்த்து விடுவார்கள் என்று படுக்கையறையிலும், குளியலறையிலும் உடையை அவிழ்க்காமலே இருக்க முடியுமா? உங்கள் படுக்கையறையை வேவு பார்த்தவர்தான் அசிங்கமானவரே தவிர, அங்கு இயல்பாக இருந்த நீங்கள் அல்ல.

                இதிலும்கூட பெண்களின் நிர்வாணம் மிகவும் அவமானத்துக்குரியதாகப் பார்க்கப்படுகிறது. இருவரும் மனிதர்கள் எனும்போது, எப்படி ஆணுடைய நிர்வாணத்திற்கு ஒன்றும், பெண்ணுடைய நிர்வாணத்திற்கு வேறாகவும் அவமானம் மாறுபட முடியும்? பொதுவாகவே ஆண் உள்ளாடை தெரியும்படி வேட்டி கட்டலாம். பெண்ணின் உள்ளாடை தவறிப்போய்த் தெரிந்தாலும் அது அசிங்கம் என்பதான மனநிலை இருக்கிறது அல்லவா, அதன் தொடர்ச்சிதான் இதுவும்!

               பிரச்சினை என்னவென்றால், பெண்ணை, ஆணைப்போன்றே ஒரு மனிதர் என்ற பார்வையுடன் பார்ப்பதில்லை என்பதுதான். மனிதனைத்தவிர வேறு எந்த மிருகமும், இனப்பெருக்கத்துக்காக இணைசேரும் நேரம் தவிர, பிற நேரங்களில், உடன் இருப்பது ஆணா பெண்ணா என்று பார்ப்பதேயில்லை என்று நான் அடிக்கடி கூறுவேன். ஆனால், மனிதன் மட்டுமே பெண்ணை, பெண்ணின் உடலாக மட்டுமே பார்க்கிறான். அதன் விளைவே, பெண்ணின் நிர்வாணம் அதிக அவமானத்துக்குரியது என்ற கருத்தாக்கம். அதுதான், சில ஆண்டுகளுக்குமுன் நிர்வாண உடலுடன் மார்ஃபிங் மூலம் தன் முகம் பொருத்தப்பட்டதற்காகவே சேலத்து மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொள்ளுமளவுக்குக் கொண்டு சென்றது. அப்படியான படம் வெளியானதில் அந்த மாணவியின் தவறு ஏதாவது இருக்கிறதா? ஆனாலும், அவள் அசிங்கம் என்பது என்ன நியாயம்? பகுத்தறிவுள்ள எவராவது அதை ஏற்க முடியுமா?

               அப்படியானால் என்னதான் செய்வது? பொதுவாக, முன்பெல்லாம் கற்பழிப்பு என்ற சொல் புழக்கத்திலிருந்தபோது, 'என்ன அழிந்தது என்று காட்ட முடியுமா?', அதில் தொடர்புடைய இருவரில் ஒருவருக்கு மட்டும் ஒன்று(கற்பு) எப்படி அழிய முடியும்?' என்று நான் கேட்பேன். அப்படித்தான், ஒரு பெண்ணின் நிர்வாணப் படம் வெளியானதால் அந்தப் பெண்ணிற்கு என்ன குறைந்துவிடும்? ஒரு சமூகமாக நானும், நீங்களும் பார்க்கிற அசிங்கப்படுத்தும் பார்வையைத் தவிர வேறு எந்தக் குறையும் அந்தப் பெண்ணிற்கு உண்மையில் ஏற்படப் போவதில்லை. ஆனால், மானம் போய்விட்டது என்று அவளை நம்பச் செய்து, தற்கொலை வரை இட்டுச் செல்கிற நிலையிலிருப்பது, நாகரிகம் அடைந்த சமூகமா?

               'என் உடலை மூடும்படி உடை அணிகிற நான் நாகரிகமானவள்தான், அந்த உடையை நான் அகற்றும் தனிப்பட்ட இடங்களுக்குள் திருட்டுத்தனமாக நுழைந்து அதைப் பார்க்கிறவரும், படமெடுக்கிறவரும், அதைப் பரப்புபவரும்தான் நாகரிகமற்றவர்கள், அப்படியான நாகரிகமற்றவர்களுக்காக நான் கவலைப்படவேண்டிய அவசியம் இல்லை', என்ற உணர்வுதான் சரியான நாகரிக வளர்ச்சியாக இருக்க முடியும். அதையும் தாண்டி, அசிங்கமான பார்வைகளை யாராவது பார்த்தாலும், 'நீங்கள் அப்படங்களைப் பார்த்ததால் நான் எவ்விதத்திலும் குறைந்துவிடவில்லை, ஆனால், என் தனிப்பட்ட இடங்களுக்குள் திருட்டுத்தனமாக நுழைந்து திருட்டுத்தனமாக எடுக்கப்பட்ட படங்களைப் பார்த்ததில் நீங்கள்தான் திருட்டுத்தனம் செய்பவர்களாக ஆகியிருக்கிறீர்கள், இது நீங்கள் கவலைப்படவேண்டிய செய்தியே தவிர, எனக்குக் கவலைப்பட ஏதுமில்லை', என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டு, நாயைப் பார்ப்பதுபோலப் பார்த்துவிட்டுக் கடந்துபோய், தன் பணிகளில் கவனம் செலுத்துவதுதான் தீர்வு. இந்தத் தன்னம்பிக்கையை நாம் சார்ந்த பெண்களுக்கு ஊட்டவேண்டிய கடமை நம் அனைவருக்கும் உள்ளது என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

               தாய்லாந்து செய்தியிலும்கூட, அரசருக்கு மனைவி இல்லை. இவர் காதலி என்பதை அவர் மறைக்கவில்லை. அதனால் அவர் நாகரிகமானவர்தான். ஆனால், அவர்களுடைய தனிப்பட்ட இடங்களில் திருட்டுத்தனமாக நுழைந்து, படமெடுத்து, பகிர்ந்தவர்கள்தான் அசிங்கத்துக்கு உரியவர்கள். அரசுரிமை மாதிரியான சிக்கல்கள் இருந்தால், அவற்றை அந்தத் தளத்தில் நேர்மையுடன் சந்திக்க வேண்டுமே தவிர, பெண்ணின் நிர்வாண உடலை ஆயுதமாக்குபவர்கள் எவரும் நாகரிகமடைந்த மனிதர்களாக இருக்கவே முடியாது என்பது அறிவுக்கடலின் கருத்து!


Sunday, July 19, 2020

கூடாதும், முடியாதும்!

அரசுக்கு நெருக்கடி ஏற்படும்போதெல்லாம், எல்லையில் பிரச்சினை வருவதும், அப்போதெல்லாம் பாகிஸ்தானையும், சீனாவையும் கண்டிப்பது, சீனாவே எதிரி அல்லது, பாகிஸ்தானுக்கு உதவுவதால் சீனா எதிரி என்றெல்லாம் கூறி சீனப் பொருட்களைப் புறக்கணித்து தேசிய உணர்வை வெளிப்படுத்த வேண்டும் என்று கூக்குரல்கள் எழுப்பப்படுவதும் வாடிக்கையாகவே மாறிவிட்டன. அந்த வரிசையில், இந்த முறை சீன எல்லை! சீன எல்லையில் நடப்பவை குறித்து பலரும் தெளிவாக விளக்கிவிட்டார்கள். ஆனால், அதனுடன் எழுந்த தேசபக்தக் குரல்கள், அரசின் நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றை கவனிக்க வேண்டியுள்ளது.


59 சீன செயலிகளைத் தடை செய்ததன்மூலம் சீனாவிற்கு மிகப்பெரிய அதிர்ச்சியை அரசு அளித்திருப்பதாகவும், மக்கள் தங்கள் பங்கிற்கு சீனப் பொருட்;களைப் புறக்கணிக்க வேண்டும் என்றும் தேசபக்தர்கள் குதிக்கிறார்கள். அவற்றில் கணிசமானவை, இன்றுவரை கட்டணம் எதுவும் வசூலிக்கவே தொடங்கவில்லை என்பதையெல்லாம்கூட விட்டுவிடுவோம். ஆனால், மே 5இலிருந்து எல்லையில் மோதல்கள் நடப்பதாகக் கூறிய அரசு, ஜூனில் ரூ.1126 கோடிக்கான ஒப்பந்தத்தை ஷாங்காய் டன்னல் எஞ்சினியரிங் கம்பெனி என்ற சீன நிறுவனத்திற்கு வழங்கியது. தலைநகரப் பகுதியில் தரையடி அதிவேக சுரங்க ரயில் பாதை அமைக்கும் பணிக்கான இந்த டெண்டரில், தொழில்நுட்ப அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 5 நிறுவனங்களில் 3 இந்திய நிறுவனங்களும் இருந்தன. செலவு அடிப்படையில் மிகக் குறைந்த தொகையைக் குறிப்பட்ட சீன நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டது. அப்படித்தான் தேர்ந்தெடுக்கப்படவும் முடியும் என்பதுதான் உண்மை.

மக்களைச் சீனப் பொருட்களைப் புறக்கணியுங்கள் என்று கோரிவிட்டு, அரசு சீன நிறுவனத்திற்கு ஒப்பந்தம் அளிக்கிறது என்ற விமர்சனம் எழுந்த ஓரிரு நாட்களில், கிழக்கத்திய சரக்குப் பாதைக்கான ரூ.470 கோடி ஒப்பந்தம் பெற்றிருந்த சீன நிறுவனமான சைனா ரயில்வே சிக்னல் அண்ட் கம்யூனிகேஷன் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஏதோ சீன நிறுவனங்களை அரசு புறக்கணிப்பதான தோற்றத்தை இதன்மூலம் ஏற்படுத்த முயன்றாலும், உண்மையில், 2016இலிருந்து இதுவரை அந்தப் பணியில் 20 சதவீதம் அளவுக்கு மட்டுமே நிறைவுற்றிருக்கிறது என்பதுதான் உண்மையான காரணம். ஆனாலும், அது பன்னாட்டு விதிகளுக்கு முரணானது என்று அந்நிறுவனம் இந்திய ரயில்வேமீது வழக்குத் தொடுத்துள்ளது என்பதுடன், அந்தப் பணிக்கு கடனுதவி அளிக்கும் உலக வங்கியும், ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதை ஏற்பதாக இன்னும் அறிவிக்கவில்லை.

அதாவது, இத்தகைய பன்னாட்டு வணிக ஒப்பந்தங்களிலெல்லாம், பிற பிரச்சினைகள் தாக்கம் ஏற்படுத்த முடியாது என்பதையும், அப்படி ஏற்படுத்தினால் அது இந்தியாவின் வணிக நலன்களுக்குக் கேடாக அமையும் என்பதையும்தான் இவை விளக்குகின்றன. ஒரு பன்னாட்டு நிறுவனத்தின்(உதாரணம்: ஹ்யூண்டாய், நோக்கியா) இந்தியத் தொழிலாளர்களோ, அல்லது பன்னாட்டு நிறுவனத்திற்கு(உதாரணம்: ஸ்டெர்லைட்) எதிராக இந்திய மக்களோ போராடினால், முதலீட்டாளர்கள் நம்பிக்கை இழந்துவிடுவார்கள் என்று கூறுகிற அரசு, தனக்கு நெருக்கடி ஏற்படும்போது மட்டும், பன்னாட்டு நிறுவனங்களை எதிர்க்குமாறு மக்களை திசை திருப்புகிறது என்பதுதான் புரிந்துகொள்ள வேண்டிய உண்மை.

சரி, இந்தியாவுக்கு எதிராகச் சீனா என்ன செய்தாலும், சீனப் பொருட்களைப் புறக்கணிக்கவே கூடாதா? கூடாதா என்ற கேள்வியைவிட, முடியுமா முடியாதா என்ற கேள்விதான் பொருத்தமாக இருக்கும். உற்பத்தி சமூக உடைமையாதல் முதலாளித்துவப் பொருளாதாரக் கட்டமைப்பின் ஒரு முக்கியமான முன்னேற்றம். அதாவது, தனக்காக உற்பத்தி செய்து கொள்ளாமல், சமூகத்துக்காக(முதலாளித்துவக் கட்டமைப்பில் சந்தை!) உற்பத்தி செய்தல். எப்போது அது சந்தைக்கான உற்பத்தியாக மாறிவிட்டதோ, அப்போதே சந்தையை விரிவாக்குவதும் அடிப்படையான தேவைகளுள் ஒன்றாகிவிடும். அதனால்தான், திருப்பூரில் உற்பத்தி செய்யப்படும் பின்னலாடைகளை, திருப்பூருக்கோ, தமிழ்நாட்டுக்கோ அல்லது இந்தியாவுக்கோ மட்டும் என்று வைத்துக்கொள்ள முடியாமல், உலகம் முழுவதும் சந்தைகளைத் தேட வேண்டியிருக்கிறது. அதையெல்லாம் விட்டுவிட்டு, தற்சார்பு என்ற பெயரில் (வணிகத்தில்) இந்தக் கோட்டைத் தாண்டி நானும் வரமாட்டேன், நீயும் வரக்கூடாது என்றெல்லாம் கூறுவது, நமது உற்பத்திகளைச் சுருக்கிக்கொள்வதாக மட்டுமல்ல, பல உற்பத்திகளை நடத்த முடியாத நிலையையும் ஏற்படுத்தும். ஏனென்றால், முழுமையாக உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் மட்டுமின்றி, பல தொழில்களுக்கான மலிவான மூலப்பொருட்களும் இறக்குமதி செய்யப்படுகின்றன. அவை கிடைக்காவிட்டால், அந்தத் தொழில்கள் லாபரகமாகச் செயல்பட முடியாது.


உதாரணமாக, சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுவற்றில், 12 சதவீதம் 'ஆர்கானிக் கெமிக்கல்ஸ்' என்ற பிரிவினைச் சேர்ந்தவை. இவைதான் இந்திய மருந்து உற்பத்தித் துறைக்கான மூலப்பொருட்களில் 66 சதவீதமாக உள்ளன. கொரோனா தடைகளால், வெளிநாடுகளிலிருந்து சரக்குப் போக்குவரத்துத் தடைப்பட்டிருந்ததால், இந்த கரிம வேதிமங்களும் வரவில்லை. அதனால், உற்பத்தி குறைந்துபோன மருந்துகளில் ஹெபாரின் ஊசியும் ஒன்று. கொரோனா சிகிச்சையிலும்  பயன்படுத்தப்படும் இந்த மருந்தை, போதிய அளவு உற்த்தி செய்ய முடியாமற்போனதால், இந்திய மருந்து விலை ஆணையமே 50 சதவீத விலை உயர்வை அனுமதித்தது என்பது நடப்பு உதாரணம். சீன வைரஸ் என்று முதலில் ட்ரம்ப் ஒதுக்கியதால் கொரோனா அமெரிக்காவைத் தாக்காமல் விடவில்லை என்பதைப் போலவே, சீனப் பொருட்கள் என்று ஒதுக்குவதும், இந்தியப் பொருளாதாரத்திலும், தொழில்துறையிலும் பாதிப்பை ஏற்படுத்தாமல் விடப்போவதில்லை. அதைப் போலவே, 5ஜி தொழில்நுட்பத்தில் முன்னணியில் இருக்கும் ஹுவாவே நிறுவனத்தையும், இசட்.டி.இ. நிறுவனத்தையும் அரசுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனங்களான எம்டிஎன்எல்லும், பிஎஸ்என்எல்லும் புறக்கணிக்க வேண்டும் என்ற அறிவுறுத்தலும். இதுவும், அரசுத்துறை நிறுவனங்களில் கட்டண உயர்வுக்குக் காரணமாக அமைந்து, போட்டியிடும் திறனைக் குறைத்துவிடும் என்பதுதான் வெளியில் தெரியாத உண்மை.

எனவே, சீனப் பொருட்களை மட்டுமல்ல, வேறு எந்த நாட்டின் பொருட்களையுமே, வணிகம் தொடர்பில்லாத வேறு காரணங்களுக்காகத் தவிர்ப்பது என்பது, தவிர்க்கிற நாட்டின் பொருளாதாரத்திற்கு இழப்பாகவே முடிகிற காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. பாதுகாப்புத் துறைக்கு எவ்வளவு அதிக ஒதுக்கீடு செய்தாலும், எந்த நாடும், எந்தப் பிரச்சினைக்கும் போரைத் தீர்வாகத் தேர்ந்தெடுக்க முடியாத, அப்படியே தேர்ந்தெடுத்தாலும், அப்போதும் வணிக உறவுகளைத் துண்டித்துக்கொள்ள முடியாத காலம் இது. எனவே, எல்லை முதலான பிரச்சினைகளைப் பேச்சு வார்த்தைகள் மூலம்தான் தீர்ப்பதுதான் சரி என்கிற நிலையில், உள்நாட்டு நெருக்கடிகளை மறைக்க எல்லையில் இல்லாத பிரச்சினையை இருப்பதாகத் தோற்றம் ஏற்படுத்துவது, இந்தியப் பொருளாதாரத்தை மேலும் பின்னடைவுக்கே இட்டுச் செல்லும்!

-அறிவுக்கடல்