இந்த வலைப்பூவைத் தொடங்கிய காலத்தில், பல தொடர்ச்சியாக எழுத வேண்டிய பணிகள் இருந்தன. அப்படி சங்கக்குரல் உள்ளிட்ட இதழ்களில் வெளியானவற்றை மீண்டும் இங்கு பதிவிட நான் விரும்பாததால், இது அப்படியே நின்று போனது. இப்போது, இதற்காகவே தொடர்ந்து எழுதத் திட்டமிட்டிருக்கிறேன். இதில் பதிவிடப்படுபவற்றை பிறர் பயன்படுத்திக்கொள்ளத் தடையில்லை!
-அறிவுக்கடல்

Wednesday, January 27, 2021

பொது விடுமுறை...!

இன்று தைப்பூசத்திற்காக அரசு விடுமுறை... அரசு விடுமுறைகள் பற்றியே மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பது என் நிலைப்பாடு. பொதுவான விடுமுறைகளை ரத்து செய்துவிட்டு, அவற்றை பணியாளர்களின் விடுப்புக் கணக்கில் சேர்த்துவிடலாம் என்பது என் கருத்து. விடுமுறையும் அவர்களுக்குத் தேவையானபோது பயன்படும், அலுவலகங்களும், தொழிற்சாலைகளும் தொடர்ந்து இயங்கும். இதெல்லாம் சாத்தியமா? இந்த உதாரணத்தைப் பார்ப்போம்!

 

சோவியத் ஒன்றியத்தில் புதிய நாட்காட்டி ஒன்றை 1923இல் ஸ்டாலின் அறிமுகப்படுத்தினார். புரட்சி முடிந்ததுமே, 1918இலேயே சோவியத் ஒன்றியம், உலகோடு ஒத்திசைந்து, கிரிகோரியன் நாட்காட்டிக்கு மாறியிருந்தது. 1923இல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தப் புதிய நாட்காட்டியில் வாரம் மட்டும் மாற்றியமைக்கப்பட்டது. வாரத்திற்கு 5 நாட்கள்தான். கிழமைகள் கைவிடப்பட்டு, ஒவ்வொரு நாளுக்கும் ஒரு வண்ணம் தரப்பட்டது. அவ்வாறே குடிமக்களுக்கும் வண்ணம் ஒதுக்கப்பட்டது. பச்சை வண்ணம் கொண்டவருக்கு, பச்சை நாளில்(கிழமை) ஓய்வு. இதனால், உலகின் மற்ற நாடுகளின் தொழிலாளர்களுக்கு ஏழு நாள் கொண்ட வாரத்திற்கு, ஒரு நாள் வீதம் ஆண்டிற்கு 52 ஓய்வு நாட்கள் கிடைத்தால், சோவியத்தின் தொழிலாளர்களுக்கு 5 நாளுக்கு ஒரு நாள் வீதம் ஆண்டிற்கு 72 நாட்கள்(365இல் 5 நாட்கள் புரட்சி தொடர்பான பொது விடுமுறை நாட்கள்) ஓய்வு கிடைத்தன. ஆனால், மறுபுறம் பிற பொதுவான விடுமுறைகள் நீக்கப்பட்டதால், உழைக்கும் திறன் கொண்ட மனிதர்களில் 80% பேர் ஆண்டின் எல்லா காலகட்டத்திலும் உழைத்துக்கொண்டே இருந்தனர், கூடுதல் ஓய்வும் பெற்று! சோவியத் ஒன்றியத்தின் பிரமாண்ட வளர்ச்சியைத் தொடங்கி வைத்ததில் ஸ்டாலின் கொண்டுவந்த இந்த நாட்காட்டிக்கு முக்கியப்பங்கு உண்டு. குடும்பத்தினருக்கு மாறுபட்ட வண்ணங்கள் இருந்ததால், மாறுபட்ட ஓய்வு நாட்கள் இருந்தது உள்ளிட்ட காரணங்களால், 1929இல் 6 நாள் வாரமாகி, 1940இல் 7 நாள் வாரத்திற்கே சோவியத் மாறியது. ஆனால், அதிக ஓய்வையும் அளித்து, அதிக உற்பத்தியையும் உருவாக்கிய இந்த முயற்சி நிச்சயமாக மீண்டும் கவனிக்க வேண்டியதாக இன்று இருக்கிறது.

இன்று எல்லா நிறுவனங்களும் 24/7 சேவை என்று பேசத் தொடங்கியிருக்கின்றன. உலகின் முதல் இரண்டு பொருளாதாரங்களின் ஜிடிபியில் சேவைத் துறைகளே (அமெரிக்கா 80%, சீனா 51.6%) மிகப்பெரும் பங்கை அளிக்கின்றன. வேட்டைக்கார(ஹண்ட்டர் கேதரர்) வாழ்க்கையிலிருந்து பயிரிடக் கற்றபோது மனிதனுக்கு நாள் முழுவதும் விவசாயம்தான் வேலையாக இருந்தது. சித்திரமும் கைப்பழக்கம் என்று அதன் நுட்பங்களைக் கற்றபின், உழைப்பும், நேரமும் மிச்சமாகி, தொழில்கள் உருவாயின. அவற்றால் உருவான கருவிகளும், தொழில்நுட்பங்களும் விவசாயத்துக்கான நேரத்தையும், உழைப்பையும் மேலும் குறைத்ததோடு நில்லாமல், அந்தக் கருவிகளை உற்பத்தி செய்வதிலும் அதே தாக்கத்தை ஏற்படுத்தியதால், அவற்றிற்குத் தேவையானவையும் குறைந்தன. அவற்றில் உபரியான(வேலை வாய்ப்பிழந்த!) மனிதர்கள், (வேலை வாய்ப்பிருந்து)உழைப்பு போக எஞ்சிய நேரத்தைக் கொண்டாட விரும்பிய மனிதர்களுக்கு(டாக்சி ஓட்டுவதிலிருந்து, ஓட்டலில் பரிமாறுவது என்று மிக நீண்ட பட்டியலாக)  சேவை செய்பவர்களாகி சேவைத்துறையாகவே ஆனது. 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிறந்திருந்த அந்த சேவைத்துறை, இன்று பொருளாதாரங்களை நிர்ணயிக்கிற ஒன்றாக வளர்ந்திருக்கிறது. முதலிரண்டு நாடுகளின் பொருளாதாரத்தில் தொழில்துறையும்- அமெரிக்கா 19.1%, சீனா 40.5%, விவசாயமும் - அமெரிக்கா 0.9%, சீனா 7.9% குறைந்த பங்கையே அளிக்கின்றன என்பதுடன்,  சேவைத்துறையின் பங்கு மிகவேகமாக உயர்ந்து கொண்டேயும் இருக்கிறது. அப்படியான நிலையில்தான், 24/7 சேவை என்பது அவசியமாகிறது.

உலகம் 24/7 சேவையை நோக்கிச் சென்று கொண்டிருக்கும்போது, விடுமுறைகளை அதிகரித்துக்கொண்டே செல்வது என்பது பின்னோக்கி செல்வதாகாதா? தமிழ்நாட்டின் மக்கள்தொகையில், 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி 87.6% இந்துக்கள். அதாவது, 8இல் ஒருவர் பிற சமயத்தவர். அப்படியானால், இதைப் பொதுவான விடுமுறையாக அளிக்காத நிலையில், இந்துக்கள் அனைவருமே விடுப்பு எடுத்தாலும்கூட 8இல் ஒருவர் பணிக்கு வருவார் என்பதுதானே எதார்த்தம்? இந்துக்களிலும்கூட, வீட்டில் துக்கம் நிகழ்ந்திருந்தால் தீபாவளி போன்ற பெரிய பண்டிகைகளையே கொண்டாடாமல் இருக்கிற நடைமுறை உண்டு. ஆக, எந்தப் பண்டிகைகையுமே 15-20% பேர் கொண்டாடாமல் இருக்கிற வாய்ப்பு உள்ளது. கொண்டாட்டமும் இல்லாததால் வீட்டில் இருப்பதும் அவர்களுக்குத் தண்டனையாகவே அமையும். அந்த நாளைத் தங்கள் தேவைக்கு விடுப்பாக எடுக்க முடியும் என்றால், பணிக்கு வருவதையே அவர்கள் விரும்புவார்கள். அவர்கள் பணிக்கு வருவதால் அலுவலகங்கள், தொழிற்சாலைகள் ஆகியவை தொடர்ந்து இயங்கும். அவ்வளவு குறைந்த பணியார்களைக் கொண்டு இயங்குவது சாத்தியமா? கொரோனா லாக் டவுன் காலத்தில், குறைந்த பணியாளர்களைக் கொண்டு(ஸ்கெலிட்டன் ஸ்டாஃப்) எல்லாமே இயங்க முடிந்ததே? அதுவும், ஓரிரு நாட்கள் அல்ல, மாதக் கணக்கில்!

இதில், ஒரு சமயத்தின் பண்டிகைக்கு விடுமுறை அளிப்பதாலேயே, பிற சமயங்களின் பண்டிககைகளுக்கும் விடுமுறை அளிக்கவேண்டியது அவசியமாகி விடுகிறது. 2011 கணக்கெடுப்பின்படியே, தமிழகத்தில் 5.86% கிறித்தவர்களும், 0.12% இஸ்லாமியர்களும் இருக்கிறார்கள் எனும்போது, அந்த சமயங்களின் பண்டிகைகளுக்கான விடுமுறைகளில், முறையே 84.14%, 99.88% பேர் பண்டிகையுமின்றி, தேவையுமின்றி விடுமுறையில் இருக்கிறார்கள். முன்பே குறிப்பிட்டதுபோல, இந்த நாட்கள் அவர்கள் விரும்பியபோது எடுத்துக்கொள்ளும் விடுப்பாக எடுத்துக்கொள்ள முடியும் என்றால், இந்த விடுமுறைகள் ரத்து செய்யப்படுவதை, பிற சமயத்தவர்கள் மட்டுமின்றி, அந்தந்தச் சமயம் சார்ந்தவர்களே வரவேற்பார்கள் என்பதுதான் உண்மை நிலை.

அதனால், சமயம் சார்ந்த விடுமுறைகள் அனைத்தையும் ரத்து செய்து, அவற்றை ஊழியர்கள் எடுத்துக்கொள்ள அனுமதிக்கும் தற்செயல் விடுப்புக் கணக்கில் சேர்ப்பது என்பது, ஊழியர்களுக்கும் உதவியாகவும், நிர்வாகம், உற்பத்தி முதலானவற்றுக்கும் பயனுள்ளதாகவும் அமையும். கவனிக்க வேண்டியது என்னவென்றால், ஏற்கெனவே இருக்கிற ஆர்எல் என்னும் சமயம் சார்ந்த விடுப்பு. விடுப்பு எடுக்கிற நாளின்மீது எப்போது எடுக்கலாம் என்பதான கட்டுப்பாடுகள் விதிப்பது, அதற்கு விடுமுறையாகவே இருக்கட்டும் என்ற உணர்வைத் தோற்றுவித்துவிடும். அதனால், அப்படியான கட்டுப்பாடுகள் இன்றி, விடுப்புக் கணக்கில் வரவுவைக்க வேண்டும். சொல்லப்போனால், சுதந்திர நாள், குடியரசு நாள், காந்தி பிறந்தநாள் ஆகியவற்றைத் தவிர, மற்ற அனைத்து விடுமுறை நாட்களையும் ரத்து செய்துவிட்டு, ரத்து செய்யப்பட்ட எண்ணிக்கைக்கு சமமான நாட்களை ஊழியர்களின் விடுப்புக் கணக்கில் வரவு வைத்தல் என்பது, மிகப்பெரிய முன்னேற்றமாக இருக்கும்.

இவை மட்டுமின்றி, இந்த அறிவிக்கப்பட்ட விடுமுறை நாட்கள், மக்களுக்கும் அரசு ஊழியர்களுக்குமான இடைவெளியையும் அதிகரிக்கின்றன. ஒரு வேலைக்காக அரசு அலுவலகத்து வருகிற மக்கள், அன்று அரசு விடுமுறை என்று தெரியும்போது, தங்கள் வேலை நடக்கவில்லை என்ற வருத்தத்தில், இவர்களுக்கெல்லாம் ஊதியத்துடன் விடுப்பு வழங்கப்படுகிறது என்ற வெறுப்பாகவே மாற்றிக் கொள்கிறார்கள். குறைந்த ஊழியர்களுடன் அலுவலகம் இயங்கினால், அவர்கள் பணியை செய்து தரவேண்டிய ஊழியர் இல்லையென்றாலும், அவர் அவரது விடுப்பில் சென்றிருக்கிறார் என்ற உணர்வே ஏற்படும். எனவே, விடுமுறைகளை ரத்து செய்வது என்பது, ஊழியர்களுக்கு மட்டுமின்றி, எல்லா நாட்களிலும் அலுவலகம் திறந்திருக்கிறது என்ற வகையில், மக்களுக்கும் மகிழ்ச்சிக்குரியதாகவே இருக்கும். சொல்லப்போனால், வழக்கமான வார விடுமுறை நாட்களில்கூட அலுவலகத்தைத் திறக்கவும், அந்நாட்களில் பணிக்கு வருபவர்களுக்கு கூடுதல் விடுப்பு உள்ளிட்ட பலன்களைத் தந்து ஊக்குவிக்கவும் வேண்டிய காலகட்டத்திற்கு நாம் வந்திருக்கிறோம். ஸ்டாலினின் நாட்காட்டியையேகூட, தற்போதைய காலத்திற்கேற்ற மாற்றங்களுடன் நடைமுறைப்படுத்தினால், மிகப்பெரிய வளர்ச்சியை அடையலாம்!

குறிப்பிட்ட சிலரை திருப்திப்படுத்துவதற்காக, தைப்பூசம் போன்று புதிய புதிய சமயம் சார்ந்த விடுமுறைகளை அறிவிப்பது, நிச்சயம் முற்போக்கான நடவடிக்கை அல்ல. பல்வேறு தளங்களிலும் இந்தியாவின் முதல் மாநிலமாகத் திகழ்கிற தமிழகம், சமயம் சார்ந்த விடுமுறைகளை விடுப்புகளாக மாற்றுகிற நடவடிக்கையையும் எடுத்து, வளர்ச்சிக்கான வழியில் மற்றொரு அடியினை எடுத்துவைத்து, மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக மாறவேண்டும்!

Wednesday, January 13, 2021

பொங்கல் வாழ்த்துகள்!

கால் நூற்றாண்டுக்குமுன் வரை எழுத்தாளராவது அவ்வளவு சுலமல்ல...
யார் வேண்டுமானாலும் எழுதலாம், ஆனால், வெளியிடுவது பதிப்பகங்கள் ஏற்றால்தான் நடக்கும். அதனால், வெளியானால்தானே எழுத்தாளர்?

இதனை, வலைப்பூக்கள்() மாற்றியமைத்தன. அப்போதுகூட, ஒரு செய்தியை சிறிய கட்டுரையாகவாவது எழுதித்தான் பதிப்பித்துக் கொண்டிருந்தார்கள்..

அதன்பின் மைக்ரோ ப்ளாக்கிங் என்ற வகையில் ட்விட்டர் போன்றவை வந்தன. மொபைல் சேவையின் குறுஞ்சேவை வசதியைப் பயன்படுத்தியதால் 2006இல் வந்த ட்விட்டர், 2004 உருவாகியிருந்த முகநூலைவிட அதிகம் பரவியிருந்தது. ஆண்ட்ராய்ட் மொபைல்களின் வரவுக்குப் பின்னர், முகநூல் அடைந்த வளர்ச்சியும், 140 எழுத்துகளுக்குட்பட்ட குறுஞ்செய்தியை இணையம் இல்லாதவர்களுக்கும் வழங்கும் சேவை என்ற இடத்தைக் கைவிட்டு ட்விட்டர் அடைந்த புதிய வடிவமும், மைக்ரோ ப்ளாக்கிங், எழுதுதல் போன்ற எதைப் பற்றியும் அறிந்திருக்கவேண்டிய அவசியமே இன்றி, எல்லோரையும் எழுத்தாளராக்கிவிட்டன.



பதிப்பாளர்கள் மட்டுமே பதிப்பித்தவரை, அவர்களிடமே பிழை சரிபார்ப்பவர் இருப்பார், எழுத்துப் பிழைகள், இலக்கணப் பிழைகள் ஆகியவற்றுடன், பதிப்பாளரே கருத்துப் பிழைகள், தரம் ஆகியவற்றைப் பரிசீலித்தபின்தான் வெளியிட ஏற்பார் என்ற கட்டுப்பாடுகள் இல்லாமற்போயின. யார் எழுதினாலும் யாருடைய மதிப்பீடும், உதவியும் தேவையின்றி அவர்களே வெளியிட்டுக்கொள்ளலாம் என்ற நிலை, அவர்களேகூட சரிபார்க்காமல் வெளியிடுகிற அவசரத்தையும்கூட உருவாக்கிவிட்டது. அதனால்தான், சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகளில் - பதிவுகளில் இலக்கணப் பிழைகள் ஏராளமாகக் காணப்படுகின்றன.

பொருட் பிழைகள் என்று நான் கருதுவதில்லை. ஏனென்றால் அவரவர்க்குச் சரி என்று பட்டதைத்தானே எழுதிகிறார்கள்? நம் பார்வையில் தவறு என்பதற்காக அதைப் பொருட்பிழை என்று அழைப்பது நியாயமாகாது.

ஆனால்....

மிகமோசமான, நாகரிகமற்ற சொற்களின் பயன்பாடு.... குறிப்பாக, பாஜக, மோடி ஆகியோரை விமர்சிப்பவர்களுக்கு, அவர்களை ஆதரிப்பவர்கள் எழுதும் பதில்கள் எப்போதுமே, எழுதிய மனிதரின் தனிப்பட்ட வாழ்க்கையைம், ஒழுக்கத்தையும், நாக்கூசும் சொற்களால் விமர்சிப்பதாகவே இருக்கின்றன.

என் கருத்து என்னவென்றால், நம்மை ஒரு 'மனிதர்' திட்டுகிறார் என்றால், அதற்கு அவர் பயன்படுத்தும் சொற்கள், அவரது தரத்தைத்தான் காட்டுமே நம் தரத்தை அல்ல... நாமே ஒருவரைத் திட்டவேண்டி வந்தால்கூட, நமக்குத் தெரிந்த சொற்களைத்தானே பயன்படுத்துவோம்? அதனால், நம்மைப் பற்றி மற்றவர்கள் என்ன சொல்லித் திட்டினார்கள் என்பதற்காகக் கவலைப்பட வேண்டியதில்லை.

அடுத்து... நாய் குரைக்கிறது. நாம் திருப்பிக் குரைப்போமா? திருப்பிக் குரைத்தால் நாமும் நாயாகிவிடுவோம். நாய் குரைக்கும்போது நமக்கு அதன்மீது பெரிதாகக் கோபம் வருவதி;ல்லையே, ஏன்? ஏனென்றால் அது விலங்கு, நமக்குச் சமமமானதல்ல, நம்மைவிடத் தாழ்ந்தது என்று நமக்குப் புரிந்திருக்கிறது. அசிங்கமான சொற்களைப் பதிவிடுபவர்கள் அத் தரத்தவர்கள்தான்!

அப்படிப் பார்க்கத் தொடங்கிவிட்டால், அவர்களுக்கு பதிலளிப்பதை – பதிலுக்குக் குரைப்பதை – நாமும் நிறுத்திவிடுவோம். மாறாக, நம்மில் பலர், அவர்களுக்கு அவர்களின் மொழியில் - அதாவது அசிங்கமான சொற்களால் பதிலளிக்கத் தொடங்கிவிடுகிறார்கள். அதாவது, நாமும் குரைக்கத் தொடங்கிவிடுகிறோம். பதிலுக்குக் குரைத்தால், குரைப்பதை நாய் நிறுத்துமா? அதிகமாகத்தானே குரைக்கும்? அதனால்தான், முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களில், அசிங்கமான சொற்களாலான பதிவுகளை ஏராளமாகக் காண முடிகிறது.

மாற்றாக....
1.    பதில் அளிக்காமல் அத்தகையோரை கண்டுகொள்ளாம் விடலாம்
2.    அத்தகைய பின்னூட்டங்களை நீக்கிவிடலாம்
3.    மோசமான மொழி என்று முகநூலில் புகார் செய்து அந்த பதிவை, பின்னூட்டத்தை நீக்கலாம்
4.    தொடர்ந்து மோசமான மொழி உள்ளிட்ட பதிவுகளைச் செய்பவர்களை முகநூல் முடக்கிவிடுகிறது. அதற்குத் தொடர்ந்து புகாரளிக்கலாம்.
இவற்றால்...
1.    நம் பதிவுகளில் உணர்ச்சிவசப்பட்டு தரம்தாழ்ந்த மொழி இடம்பெறாது
2.    உணர்ச்சிவசப்படுத்தும் பதில்களால்-பதிவுகளால் திசைதிரும்புவது தவிர்க்கப்பட்டு,  சொல்லவேண்டிய செய்திகளை தவறாமல் சொல்லலாம்.
3.    சமூக ஊடகங்களில் பரவிக்கொண்டிருக்கும் அசிங்கமான தமிழை ஒழிக்கலாம்...

நமக்காக, நாம் பேச வேண்டிய அரசியல்-பொருளாதார-சமூக பிரச்சினைகளிலிருந்து திசை திரும்பாலிருப்பதற்காக, நம் தமிழின் தரத்தைக் காப்பதற்காக இவற்றைச் செய்வோம் என்று தமிழரின் புத்தாண்டான தைத்திருநாளிலில் உறுதியேற்போம் என்று வாழ்த்தி மகிழ்கிறேன்!


வாழ்த்துகளுடன்,
அறிவுக்கடல்


Tuesday, January 5, 2021

அரசு உத்தரவும், அரசரின் உத்தரவும்!

          நாடுகளை முடியரசர்கள் ஆண்ட காலத்தில், அரசர் எடுப்பதுதான் முடிவு. அமைச்சர்கள், அவையோர் உள்ளிட்டோரை அரசர் கலந்தாலோசிப்பதையும், ஆலோசிக்காமல் தவிர்ப்பதையும் யாருமே கேள்வி கேட்க முடியாது. ஆலோசித்தாலும், அனுபவமுடையோரின் கருத்தையோ, பெரும்பான்மையினரின் கருத்தையோ அரசர் ஏற்கவேண்டுமென்ற அவசியமில்லை. சொல்லப்பட்ட ஆலோசனைகளுக்கு நேர்மாறாகக்கூட அரசரின் முடிவு இருக்கலாம்.

              அதனை அரசர் மட்டுமே தனிப்பட்டு எடுப்பதால், அக்காலத்திய அரசு(அரசரின்!) உத்தரவுகள், 'நான் உத்தரவிடுகிறேன்...', 'நான் அறிவிக்கிறேன்...' என்பனவற்றைப் போன்ற, செய்வினை வாக்கியங்களாகவே இருக்கும்.

           ஆனால், மக்களாட்சி என்ற அமைப்பு உருவானபின், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அவை எடுப்பதுதான் முடிவு. மக்களாட்சி நடைபெறுகிற எல்லா நாடுகளிலும், பிரதமர், குடியரசுத் தலைவர் உள்ளிட்ட அரசுத் தலைவர் எவரும், நாடாளுமன்றம் போன்ற ஆளும் அவையை கலந்தாலோசிக்காமலோ, மீறியோ தனிப்பட்டு எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ள முடியாது.

               அதனாலேயே, இக்காலத்திய அரசு உத்தரவுகள் அனைத்தும் 'உத்தரவிடப்படுகிறது...', 'முடிவெடுக்கப்பட்டுள்ளது...' என்பதான செயப்பாட்டுவினை வாக்கியங்களாகவே இருக்கும். உண்மையில், அனைத்து குடிமக்களையும் மனிதர்களாக மதிக்கும் நாகரிக வளர்ச்சியின் வெளிப்பாடே, தான் மட்டும் உயர்ந்தவர் இல்லை என்பதை ஏற்று, பொதுவான முடிவாக வெளியிடுதல்.

              இந்த மரபு, தமிழ்நாட்டில் ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பேற்றபின் மாறியது. யாரையும் ஆலோசிக்காமல், யாரையும் மதிக்காமல் முடிவுகளை அவர் உண்மையிலேயே தனிப்பட்டுதான் எடுத்தார் என்றாலும்கூட, அரசுக்கு இருக்கிற நடைமுறைகளை மாற்றியது அருவருக்கத்தக்கதாகத்தான் இருந்தது. இந்தச் சமூகத்தில் பெண்கள் சந்திக்கிற அடக்குமுறைகளை அனைவரும் அறிந்திருக்கிற நிலையில், திரைத்துறையில் பெண்கள் சந்திக்கிற நெருக்கடிகள் அதிகம் என்பதும் புரிந்தே இருக்கிறது. அப்படியான மோசமான அனுபவங்களினால், ஆண்களின் ஆதிக்கத்தை எதிர்ப்பதாகக் கருதிக்கொண்டு ஜெயலலிதா இப்படியான தவறான நடைமுறையைக் கையாண்டார் என்றுதான் கருத வேண்டியிருந்தது. அதாவது, அவர் வாழ்வில் சந்தித்த கொடுமைகளுக்கான எதிர்வினை என்று கூறுமளவுக்கு சிறிய நியாயமாவது(ஏற்க முடியாவிட்டாலும்) அவர் பக்கம் இருந்தது.

          


       ஆனால், அவருக்குப்பின் ஆட்சியைத் தொடர்கிறவர்கள் இன்றுவரை 'நான் உத்தரவிடுகிறேன்...'  என்பதான செய்வினை வாக்கியங்களையே அரசின் தகவல் தொடர்புகளில் பயன்படுத்துகிறார்கள். இதை அதிகார மமதை என்று கூறுவதைவிட, தமிழ் இலக்கணம், அரசின் மரபுகள் உள்ளிட்ட எதையுமே அறிந்திராத அறியாமை என்றுதான் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. உண்மையிலேயே முதல்வருடைய நலம் விரும்பிகள் யாராவது இருந்தால், தயவு செய்து எடுத்துச் செல்லுங்களேன்...!


Monday, January 4, 2021

கலி முத்திடுச்சு...!


          அனேகமாக எல்லா பெரிய பிரச்சினைகளுக்கும் சொல்லப்படுகிற பதில்...! 'அந்தக் காலத்துல...' என்று தொடங்கி, தொழில்நுட்ப வளர்ச்சியால் எல்லாமே சீரழிந்துவிட்டதாகப் புலம்புபவர்கள், தலைமுறை வேறுபாடின்றி காணப்படுகிறார்கள்.

          இளைஞர்கள்கூட, 'அந்தக் காலத்துல எவ்வளவு ஹெல்தியா இருந்தாங்க...' என்று பேசுவதைக் கேட்க முடிகிறது. தாத்தாக்களின் ஆரோக்கியத்தைப் பார்த்துப் பிரமிக்கிற அந்த இளைஞர்கள் தாத்தாவுடனோ, தாத்தாவின் அப்பாவுடனோ பிறந்தவர்கள் எத்தனைப் பேர் என்பதைக் கேட்டாலே பாதி உண்மை புரிந்துவிடும். இன்றைக்கு நாற்பதுகளைக் கடந்த யாராக இருந்தாலும், அவர்கள் தாத்தாவுடன் பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறந்ததாகவும், 3-4 பேர் தவிர மற்றவர்கள் குழந்தையிலேயே இறந்துவிட்டதையும் கேட்டிருப்பார்கள்.

           இன்றைக்கிருக்கிற மருத்துவ வசதிகளும், அறிவியல் முன்னேற்றங்களும் ஏற்பட்டிராத அக்காலத்தில், தாத்தா வயது வரை தப்பியவர்கள் மிகுந்த ஆரோக்கியம் பெற்றிருந்தவர்கள் மட்டுமே. சிறிய நோய்களால் தாக்கப்படுபவர்களைக்கூட காப்பாற்ற முடியாமலேயே அவ்வளவு பேரும் இறந்திருப்பார்கள். விடுதலைப் பெற்றபோது, குழந்தை இறப்பு விகிதம் 1000க்கு 200க்கும் அதிகமாக இருந்ததிலிருந்து, 2015இல் 38ஆகக் குறைந்திருக்கிறது. 1960இல் 41 ஆண்டுகளாக இருநத சராசரி வாழ்நாள், 2015இல் 68ஆக உயர்ந்திருக்கிறது. இவ்வளவும், இன்றைக்கு உற்பத்தி செய்யப்படும் உணவுப் பயிர்கள் சத்து இல்லாதவை, எல்லாம் நஞ்சு என்ற விமர்சனங்களுக்கிடையேதான் என்பதுதான் கவனிக்க வேண்டியது.

          சத்து இல்லை என்பது பழைமையிலிருந்து வெளிப்படத் தயாராக இல்லாத மனநிலை மட்டுமே என்பதற்கு இந்தப் புள்ளிவிபரங்களே சான்று. அத்துடன், இன்றுவரை உருவாகியுள்ள தொழில்நுட்பங்களே, கொரோனா வைரசின் வடிவத்தை மட்டுமின்றி, அதன் மரபணுக் கட்டமைப்பையே பார்க்குமளவுக்கு வசதி ஏற்படுத்தி, சிகிச்சைக்கு உதவி, உயிரிழப்புகளைக் குறைத்து, தடுப்பு மருந்துகளை இவ்வளவு விரைவில் உருவாக்குவதையும் சாத்தியமாக்கியிருக்கின்றன என்றால் மிகையல்ல.

          ஆனால், இன்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது என்ற குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. புதிதாக எது உருவானாலும், நல்ல, கெட்ட என்ற இரு விளைவுகளும் இருக்கும். நல்ல விளைவுகளுக்காக அந்தத் தொழில்நுட்பம் உருவாக்கப்படும்போது, பக்க விளைவாக கெட்டவையும் ஏற்பட்டாலும், அவற்றை எதிர்கொள்வதற்கான தொழில்நுட்பங்களும், அவற்றைப் பற்றிய முழு விபரங்கள் கிடைத்தபின் உருவாகிவிடும் என்பதுதான், காலம் காலமாகத் தொடரும் நடைமுறையாக உள்ளது. அதற்குள் அவசரப்பட்டு தொழில்நுட்பத்தைக் குற்றவாளிகள் ஆக்குபவர்களை, பழைமை விரும்பிகள் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும்.

        எளிய தொழில்நுட்பங்களையே கண்டு அஞ்சுபவர்களிடையே, செயற்கை நுண்ணறிவு(ஆர்ட்டிஃபிஷியல் இண்ட்டெலிஜென்ஸ்) அதிக அச்சத்தை ஏற்படுத்துகிறது என்றால் மிகையல்ல. எந்திரங்களும், மனிதர்களும் போரிடுவதாக ஆங்கிலப் படங்கள் கற்பனை செய்தால், அது உண்மையிலேயே நடக்கும் என்று அஞ்சுபவர்களையும் ஏராளமாகக் காணமுடிகிறது. ஆனால், எந்தத் தொழில்நுட்பமாக இருந்தாலும், உருவாக்குபவரின் நலனுக்காத்தான் என்பதால், உருவாக்கும் மனிதர்களுக்கு நலன் பயப்பதாகவே இருக்கும். 

அதற்கான சில உதாரணங்கள் இங்கே:

           தற்போது ஓட்டுனர் இல்லாத, தானியங்கி கார்களை நோக்கித்தான் ஆய்வுகள் சென்று கொண்டிருக்கின்றன. அவற்றின் சிறப்பான செயல்திறனால், 15 சதவீதம்வரை எரிபொருள் சேமிக்கப்படுவதாகவும், அதனால் சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய நன்மை விளையவிருப்பதாகவும் அருகாமை கால ஆய்வுகள் தெரிவிக்கின்றன. (சிக்னலில் காவலர் இல்லையென்று சிவப்பு எரியும்போதே மனிதர்கள் செல்வதுபோல இவை செல்லாது என்பதால் மற்ற வாகனங்களுக்கும் பாதுகாப்பு அதிகம்!)

         சைட்வாக் லேப்ஸ் என்ற நிறுவனம், போக்குவரத்தைக் கட்டுப்படுத்தும் செயற்கை நுண்ணறிவை உருவாக்கியுள்ளது. ஒரு நகரின் அனைத்துப் பகுதிகளின் போக்குவரத்தையும் பரிசீலித்து, குறைவான நெருக்கடியுள்ள பாதைகளில் வாகனங்களைத் திருப்பி விடுவதன்மூலம், எரிபொருள் சிக்கனமாவதால், சுற்றுச் சூழல் மாசுபாட்டை இது குறைக்கிறது.

       சீனாவுக்காக ஐபிஎம் உருவாக்கியுள்ள ஸ்மார்ட் ஹொரைஸான் என்ற செயற்கை நுண்ணறிவானது, போக்குவரத்து, கட்டுமானம், தொழிற்சாலைகள் ஆகியவற்றின் தரக் கட்டுப்பாடுகளைக் கண்காணிப்பதன்மூலம், பீஜிங் நகரின் காற்று மாசுபாட்டை 35 சதவீதம் குறைத்திருக்கிறது.

         கூகுள் பயன்படுத்தும் டீப்மைண்ட் என்ற செயற்கை நுண்ணறிவு, காலநிலைகளைக் கண்காணித்து தேவையான மாற்றங்களைச் செய்வதன்மூலம், கூகுளின் டேட்டா செண்ட்டர்களைக் குளிர்விப்பற்குத் தேவையான எரிசக்தியில் 35 சதவீதத்தை சேமிக்கிறது.

         சென்னை ஐஐடி உருவாக்கியுள்ள ஸ்மார்ட் டஸ்ட்பின்ஸ் என்ற குப்பைத் தொட்டிகள், குப்பையின் அளவை, சேகரிக்கும் வாகனத்திற்குத் தெரிவிக்கின்றன. இதன்மூலம் முக்கால் பாகத்திற்கும் அதிகமாகக் குப்பை சேராத குப்பைத் தொட்டிகளுக்கு, குப்பையைச் சேகரிக்க வாகனங்கள் வரவேண்டியதில்லை என்பதால் எரிபொருள் மிச்சமாவதுடன், சுற்றுச்சூழலும் காக்கப்படுகிறது.

         ட்ரோன்களைப் பயன்படுத்திச் செயல்படும் ஏர்லிட்டிக்ஸ் என்ற செயற்கை நுண்ணறிவு, விவசாயத்திற்கு உதவுகிறது. காற்றில் உள்ள ஈரப்பதம், கார்பன்-டை-ஆக்சைடு ஆகியவற்றின் அளவு, மண்ணின் தன்மை, பயிரின் ஆரோக்கியம் ஆகியவற்றைக் கண்காணிப்பதன்மூலம், பயிர் சிறப்பாகப் பராமரிக்கப்பட்டு, அதிக மகசூல் கிடைக்கிறது.

         காலநிலை மாற்றங்களை கவனிக்க உருவாக்கப்படும் கற்கும் திறனுள்ள செயற்கை நுண்ணறிவுக் கருவிகள், காற்று மாசுபாட்டை மட்டுமின்றி, எதனால் அதிகரிக்கிறது என்ற ஆய்வையும் செய்து, எவற்றைக் கூட்டலாம், குறைக்கலாம் என்ற அறிவுரைகளையும் தரவிருக்கின்றன.

இவை புதிய தொழில்நுட்பங்களுக்கு சில 'சாம்ப்பிள்கள்' மட்டுமே! அதனால், அடுத்தமுறை, யாராவது தொழில்நுட்பங்களால் தீமை என்று சொல்லும்போது, அப்படியே நம்பாமல், சற்றே சிந்திக்கவும், படிக்கவும் முயற்சிப்போம்! எல்லா தொழில்நுட்பங்களைப் பற்றியும் தகவல் சொல்ல இணையம் எப்போதும் தயாராகவே உள்ளது!