இந்த வலைப்பூவைத் தொடங்கிய காலத்தில், பல தொடர்ச்சியாக எழுத வேண்டிய பணிகள் இருந்தன. அப்படி சங்கக்குரல் உள்ளிட்ட இதழ்களில் வெளியானவற்றை மீண்டும் இங்கு பதிவிட நான் விரும்பாததால், இது அப்படியே நின்று போனது. இப்போது, இதற்காகவே தொடர்ந்து எழுதத் திட்டமிட்டிருக்கிறேன். இதில் பதிவிடப்படுபவற்றை பிறர் பயன்படுத்திக்கொள்ளத் தடையில்லை!
-அறிவுக்கடல்

Wednesday, September 17, 2014

நமக்கு எப்போது வரும்?

ஏதாவது ஒரு ஊரின் ஏதாவது ஒரு சாலையின் ஏதாவது ஒரு சிக்னலில் நின்று பாருங்கள்...

>சிகப்பிலிருந்து பச்சை மாறியதும், சீறிச் செல்லும் வாகனங்கள்...
>முன்னுள்ள வாகனம் செல்லும்வரை பொறுமையின்றி, வழியிருந்தால், தடுப்பைத் தாண்டி வலதுபுறம் நுழைந்து போகும் வாகனங்கள்...
>பச்சை வரும்வரை பொறுமையின்றி இண்டு இடுக்குகளில் முன்னேறி, முன் வரிசைக்கு வரும் வாகனங்கள்...
>பச்சை மாறி சிகப்பே வந்து விட்டாலும், அதன்பின்னும் சில நொடிகளுக்குக் சீறும் வாகனங்கள்...
>அதற்குள் அடுத்த சாலையிலிருந்து சீறிய வாகனங்களுடன் மோதல் வேறு...
>இவர்கள் எல்லாம் நேரந்தவறாமையை முதன்மையாகக் கொண்டவர்களோ என்றென்னும் வகையில், சாலை விதிகளைத் துச்சமாக மதித்துப் பறக்கும் வாகனங்கள்...
>வழிவிடக் கோரி ஓயாமல் ஒலிக்கும் 'ஹார்ன்கள்'...

ஆனாலும் ஏன் 'இந்தியன் பங்ச்சுவாலிட்டி...'?

இவ்வளவு வேகமாகப் போயும், ஏன் இந்த நிலை?

வேகமாகச் செல்வது சரியான நேரத்திற்குச் செல்வதற்காக அல்ல!
சக மனிதனைவிடக் கொஞ்சமே கொஞ்சமாவது தனக்குக் கூடுதலாக வேண்டும்...
கியூவில் நிற்கும்போதுகூட, ஒரு ஆளை முந்தினாலும் ஏற்படும் மகிழ்ச்சி இருக்கிறதே...
அதுதான், சாலையில் போகும்போது, சிக்னலில் நிற்கும்போது...
எல்லாவற்றிலும், கொஞ்சம்... கொஞ்சமே கொஞ்சம்... முன்னால் போனால்தான் திருப்தி...
அதற்காக விதிகளை மீறலாம்... அடுத்தவருக்கு இடைஞ்சல் செய்யலாம்...
நாலு பேருக்கு நல்லதுன்னா...
அடச்சே,
நம்ம ஒருத்தருக்கு நல்லதுன்னா எத்தனை பேருக்கு வேணாலும், என்ன வேணாலும் செய்யலாம்...

'கொசுறு'க்கு ஆசைப்பட்டே, கோணலாக்கிவிட்டோம்... எல்லாவற்றையும்!

நமது நாட்டின் சட்டங்களை நாமே மதிக்காவிட்டால், மற்றவர்கள் எப்படி மதிப்பர்?
நமக்குரிய முறை வரும் என்ற பொறுமையும்,
நமது நாட்டின் சட்டங்களை நாம் மதிக்க வேண்டும் என்ற பொறுப்புணர்வும்
நமக்கு எப்போது வரும்?