இந்த வலைப்பூவைத் தொடங்கிய காலத்தில், பல தொடர்ச்சியாக எழுத வேண்டிய பணிகள் இருந்தன. அப்படி சங்கக்குரல் உள்ளிட்ட இதழ்களில் வெளியானவற்றை மீண்டும் இங்கு பதிவிட நான் விரும்பாததால், இது அப்படியே நின்று போனது. இப்போது, இதற்காகவே தொடர்ந்து எழுதத் திட்டமிட்டிருக்கிறேன். இதில் பதிவிடப்படுபவற்றை பிறர் பயன்படுத்திக்கொள்ளத் தடையில்லை!
-அறிவுக்கடல்

Thursday, December 31, 2020

வரவேற்கிறோம், ரஜினி சார்!

         சிவாஜிராவ் கெய்க்வாட்....! வந்தாரை வாழவைக்கும் தமிழகத்துக்கு வந்து, ரஜினிகாந்த் என்ற பெயரில் வாழ்வாங்கு வாழ்ந்துகொண்டிருப்பவரின் இயற்பெயர்! கர்னாடக மாநிலத்தில் பிறந்த மராட்டியர் என்ற பேதத்தைத் தமிழர்கள் என்றுமே அவரிடம் காட்டியதில்லை. அவருக்கு மட்டுமில்லை, எவருக்குமே தமிழர்கள் பேதம் காட்டியதில்லை என்பதுதான், தமிழகத்தின் சிறப்பு!

      1975இல் தமிழில் வெளியான அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில்தான் ரஜினி அறிமுகமானார். தமிழ் மட்டுமின்றி, கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் சேர்த்து 1979க்குள் 50க்கும் அதிமான படங்களில் நடித்து, பொருளும், புகழும் ஈட்டினாலும்கூட, மன அமையின்றி, திரைத்துறையைவிட்டு விலகும் முடிவை ரஜினி எடுத்தார். பாலச்சந்தர் உள்ளிட்டோரின் முயற்சியால் அம்முடிவு மாற்றப்பட்டபின் வெளியான முதல் படமான பில்லா, ரஜினியின் திரைவாழ்க்கையின் இரண்டாவதும், மிக வெற்றிகரமானதுமான அத்தியாயத்தைத் தொடங்கிவைத்தது. வணிக அடிப்படையில் மிகப்பெரிய வெற்றியடைந்த முதல் ரஜினி படமாக அமைந்த பில்லா, தமிழின் உச்ச நட்சத்திரமாக மட்டுமின்றி, தென்னிந்தியாவின் மிகமுக்கிய நடிகராகவும் ரஜினியை உயர்த்தியது. இதில் தொடங்கி, 2007இல் ஆசியாவின் மிகஅதிக ஊதியம் பெறும் நடிகர்களில் இரண்டாவது இடம் என்ற எட்ட முடியாத இடம்வரை அளித்தவை தமிழ்ப் படங்களும், அவற்றை வெற்றிகரமாக்கிய தமிழர்களும்தான்.

        தொண்ணூறுகளில் வெளியான ரஜினி படங்கள், ரசிகர் மன்றத்தினர் பார்த்தாலே ஆறு வாரங்களுக்கு அரங்கு நிறைந்துவிடும்(ஹவுஸ்ஃபுல்) என்ற நிலைக்கு வளர்ந்திருந்தார் ரஜினி. 42 நாட்கள் ரசிகர்களால் மட்டுமே அரங்கு நிறையும்போது, 50 நாட்களைக் கடப்பதில் சிரமம் எதுவும் இல்லையென்பதால், எல்லாப் படங்களுமே 50 நாட்களைக் கடக்கும் என்ற அளவுக்கு நம்பிக்கையைப் பெற்றிருந்தார். அதைத்தான் அவரது செல்வாக்கு என்று மற்றவர்கள் அவரை நம்பச் செய்தனர். ஆம்! செல்வாக்குதான்! ஆனால், அது நடிகராக மட்டுமே!

     வெற்றிகரமான நடிகர் என்ற நிலையிலிருந்து, முதலமைச்சராகி, இறக்கும்வரை அப்பதவியில் தொடர்ந்த எம்ஜிஆரின் வாழ்க்கைதான், திரைத்துறையைச் சார்ந்த பலருக்கும், முதலமைச்சர் கனவை உருவாக்கக் கூடியதாக இன்றும் திகழ்கிறது. யார் யாரோ ஆசைப்படும்போது, தமிழ்த் திரையுலகில் வேறு எவரும் எட்ட முடியாத உச்சத்தைத் தொட்டவரான ரஜினியால் முடியாதா என்று சிலர் எண்ணினர். எண்ணியவர்கள் ரஜினியின் நலம் விரும்பிகள் அல்லர். ரஜினி முதலமைச்சரானால், தங்கள் வளர்ச்சிக்கு உதவும் என்று தங்களின் நலத்தை விரும்பியவர்கள் என்பதைப் புரிந்துகொள்ள ரஜினியால் முடியவில்லை.

       ஒரு தொழிற்சங்கம் இருக்கிறது வைத்துக்கொள்வோம்... தொழிற்சங்கம் என்றால், கழகங்களின் தொழிலாளர் அணிகளை எடுத்துக்கொள்ளக்கூடாது... சிஐடியு, ஏஐடியுசி போன்வற்றை எடுத்துக்கொள்ளவேண்டும். அவற்றின் உறுப்பினர்கள்தான் சிபிஎம், சிபிஐ கட்சிகளின் உறுப்பினர்களாக இருக்கவேண்டுமென்ற கட்டுப்பாடு கிடையாது. தொழிலாளர்கள் என்ற அடிப்படையில் ஒன்றுபட்டிருந்தாலும், அவர்களின் அரசியல் நிலைப்பாடு வேறாக இருக்கும். தொழிலாளராக அவர்களின் வாழ்க்கைக்கே கேடு விளைவிக்கும் ஆட்சிக்கு எதிராகப் போராடினாலும், தங்களுக்குப் பிடித்த கட்சி என்ற அடிப்படையில் ஆளும் அதே கட்சிக்கு தேர்தலில் வாக்களிப்பார்கள். அதைப் போலத்தான், ரஜினியின் ரசிகர்களும். ரஜினி என்ற நடிகருக்குத்தான் ரசிகர்களே தவிர, அவர்களுக்கு தனிப்பட்ட அரசியல் நிலைப்பாடு இருக்கும். இந்த உண்மையைத்தான் ரஜினி உணரவில்லை.

         எம்ஜிஆர் மட்டும் முதல்வராக எப்படி முடிந்தது என்பதுதான் உடனடியாகச் சுட்டப்படும் உதாரணம். உண்மையில், எம்ஜிஆருக்கு ஓர் அரசியல் நிலைப்பாடு இருந்தது. திமுக உருவானபோது, அதன் உறுப்பினராகி, கொள்கைகளுக்காகப் பிரச்சாரம் செய்து என்று அவருடைய அரசியல் வாழ்க்கை எப்போதோ தொடங்கிவிட்டது. தன் திரைப்படங்களிலும்கூட தனது அரசியல் நிலைப்பாட்டைத் தொடர்ந்து பேசிவந்த நிலையில், வெறும் ரசிகர்களாக இன்றி, கொள்கைக்காக அவர் படங்களை வெற்றியடையச் செய்யும் அளவுக்கு மக்களின் செல்வாக்கு அவருக்கு உருவாகியிருந்தது. தான் நம்பிய கட்சி, தன் நிலைப்பாட்டுக்கு மாறாகச் செயல்படுகிறது என்று அவர் வெளியே வந்தபோது, ஏற்கெனவே அவருடைய அரசியல் நிலைப்பாட்டைப் பின்பற்றுபவர்கள் ஏராளமாக இருந்தனர் என்பதே அவரது வெற்றிக்கு அடிப்படையாக அமைந்தது. பெரியார் உருவாக்கியிருந்த விழிப்புணர்வு, அதனால் தமிழர்களின், தமிழகத்தின் வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு உருவாகியிருந்த திமுக, அது இளைஞர்களிடையே ஏற்படுத்தியிருந்த எழுச்சி ஆகியவற்றின் அறுவடையே எம்ஜிஆரின் வெற்றி. இந்த வேறுபாடு புரியாமல், திரையில் நடித்த வேடங்களுக்காக மட்டும் மக்கள் எம்ஜிஆரைத் தேர்ந்தெடுத்ததாக நம்பியவர்கள்தான், ரஜினியைக் குழப்பினார்கள். குழப்பமடையாமலிருக்கும் அளவுக்குத் தெளிவான புரிதல் ரஜினிக்கு இல்லாமற்போனது.

        அருவருக்கும் அளவுக்கு நடைபெற்ற 1991-96 ஜெயலலிதா ஆட்சி, அதுவரை தமிழத்தில் நடைபெற்ற அரசியலே தவறோ என்ற எண்ணத்தை மக்களிடையே தோற்றுவித்திருந்தது. அப்படியான நிலையில்தான், ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்று தூண்டப்பட்டார். அதற்கு அவர் தயாராக இல்லையென்றாலும், ஆசை யாரை விட்டது என்ற நிலையிலும் இருந்தார். ஏற்கெனவே எம்ஜிஆராலும், பின்னர் ஜெயலலிதாவாலும்கூட அவமானப்படுத்தப்பட்ட உணர்வுடன் இருந்ததால், 'ஆண்டவனால்கூட தமிழகத்தைக் காப்பாற்ற முடியாது' என்ற புகழ்பெற்ற சொற்களை உதிர்த்தார் ரஜினி. எப்படியானாலும் தோற்றுவிடுமளவுக்கு ஜெயலலிதா ஆட்சி புரிந்திருந்த நிலையில், ரஜினியின் பேச்சுதான் ஜெயலலிதாவைத் தோற்கடித்தது என்று ரஜினிக்குச் சொல்லப்பட்டது. புகழுக்கு மயங்காதார் உண்டா? ஏற்கெனவே, நடிப்பு வேறு, நடைமுறை வாழ்க்கை வேறு என்பதைப் புரிந்துகொள்ள முடியாத நிலையிலிருந்த ரஜினி, எளிதாக ஏமாந்தார். அடுத்தடுத்து அவர் பேசியவற்றுக்கு ஊடகங்கள் அளித்த முக்கியத்துவம், மக்கள் செல்வாக்கு என்று அவருக்குச் சொல்லப்பட்டாலும், மண்குதிரையை நம்பி ரஜினி கடைசிவரை ஆற்றில் இறங்காதது அவரது மிகச்சிறந்த நிலைப்பாடு என்பதை மறுப்பதற்கில்லை.

        அவரது அரசியல் பேச்சுகள் தொடங்கி கால் நூற்றாண்டுத் தயக்கத்திற்குப்பின், அரசியல் வேண்டாம் என்பதான நிலையை அறிவிக்க அவர் முயற்சித்தார். சிறுநீரக மாற்று செய்திருப்பதைக் குறிப்பிட்டு, அரசியலுக்கு வந்தபின் தனக்கு ஏதாவது ஆனால் ரசிகர்கள் பாவமல்லவா என்றெல்லாம் பேசிவிட்ட ரஜினி, மீண்டும் அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவிக்க, அவருக்கு அளிக்கப்பட்ட நெருக்கடிகள்தான் காரணம் என்பது உலகறிந்த ரகசியமாக அமைந்தது. இன்றுவரை தமிழத்தை ஆண்டுகொண்டிருந்தாலும்கூட, அதிமுக அரசின் அமைச்சர்கள் உட்பட அனைவருமே, மத்தியில் ஆளும் பாஜகவின் வெளிப்படையான ஆயுதமாகவே பயன்படுத்தப்படும் சிபிஅய், வருமான வரித்துறை உள்ளிட்டவற்றிற்கு அஞ்சித்தான் கட்டுப்படுகின்றார்கள் என்பதை அவர்களே மறுப்பதில்லை. சொல்லப்போனால், ஒரு ரெய்ட் வந்தால் சரியாகிவிடும் என்று பாஜக தலைவர்கள் வெளிப்படையாகவே மிரட்டியதுகூட தமிழகத்தில் நடந்தது.

          அத்தகைய மிரட்டல்களுக்கு ரஜினி ஏன் பணியவேண்டும்? வருமான வரிக்காக வட்டித் தொழில் செய்ததாகக் கூறியது தொடங்கி, அவர் அஞ்சவேண்டிய பல குறைகள் அவரிடம் இருந்தன. திரைத்துறையினர் போன்ற பெரும் வருவாய் ஈட்டுபவர்கள் வரி நிலுவை வைப்பது என்பது வழக்கமாக நிகழக்கூடியதுதான். இதை நடிகவேள் எம்.ஆர்.ராதா பலமுறை சுட்டிக்காட்டி, தானே நிலுவை வைத்திருப்பதாகப் பொதுவெளியில் பேசவும் செய்திருக்கிறார். அதைப்போலவே, தனிப்பட்ட வரவு செலவுகளில் வாடகை நிலுவை போன்றவைகளும் யாருமே செய்யாத குற்றங்களல்ல. ஆனால், 'சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்கவேண்டும்' என்ற கூற்றைப் போல, ஆட்சியைக் கைப்பற்ற விரும்புபவர் ஒழுக்கமானவராக இருக்கவேண்டும் என்ற அடிப்படையில் இவை அனைத்தும் பொதுவெளிக்கு வந்து சந்தி சிரித்தன. அதாவது, ரஜினி எதற்காகவெல்லாம் அஞ்சினாரோ, அபராதங்களுடன் முடிந்திருக்க வேண்டிய அவை, அனைத்து மக்களுக்கும் தெரிவிக்கப்பட்டன. அவற்றால் ஏற்பட்ட தாங்க முடியாத மன உளைச்சலுக்குப் பின்னரே, வேண்டாம் என்ற தனது முடிவில் உறுதியாக நிற்கும் துணிவு அவருக்கு ஏற்பட்டிருக்கிறது.

         'பெட்டர் லேட், தேன் நெவர்'! எவ்வளவு தாமதமாக எடுக்கப்பட்டாலும் சரியான முடிவு! வரவேற்கிறோம், ரஜினி சார்! வயது பேதமின்றி அனைவரும் ரசிக்கும் கலைஞராக இருந்தவர் நீங்கள்! ஆனால், தூத்துக்குடிக்குச் சென்று வந்து, போராடிய மக்கள் குறித்து உதிர்த்த சொற்கள், சக மனிதர் என்ற இடத்தில்கூட வைத்துக்கொள்ள முடியாத அளவுக்கு வேதனையை உருவாக்கின. சிறு வயதில் உங்களை ரசித்த மனநிலையை மட்டும் நினைவில் வைத்துக்கொண்டு, வெறுப்புறும் அளவுக்கு இடையில் நிகழ்ந்தவற்றை மறக்க விரும்புகிறோம். 'நுணலும் தன் வாயால் கெடும்' என்பதைப் போல, உங்களுக்குத் தெரியாத அரசியல் துறையைப் பற்றி, மீண்டும் ஏதாவது உளறி, உங்கள் மரியாதையை மேலும் கெடுத்துக்கொள்ளாதீர்கள் என்ற வேண்டுகோளுடன், எஞ்சிய உங்கள் வாழ்நாள் நலமாக அமைய வாழ்த்துகிறோம்!

No comments:

Post a Comment