இந்த வலைப்பூவைத் தொடங்கிய காலத்தில், பல தொடர்ச்சியாக எழுத வேண்டிய பணிகள் இருந்தன. அப்படி சங்கக்குரல் உள்ளிட்ட இதழ்களில் வெளியானவற்றை மீண்டும் இங்கு பதிவிட நான் விரும்பாததால், இது அப்படியே நின்று போனது. இப்போது, இதற்காகவே தொடர்ந்து எழுதத் திட்டமிட்டிருக்கிறேன். இதில் பதிவிடப்படுபவற்றை பிறர் பயன்படுத்திக்கொள்ளத் தடையில்லை!
-அறிவுக்கடல்

Sunday, July 19, 2020

கூடாதும், முடியாதும்!

அரசுக்கு நெருக்கடி ஏற்படும்போதெல்லாம், எல்லையில் பிரச்சினை வருவதும், அப்போதெல்லாம் பாகிஸ்தானையும், சீனாவையும் கண்டிப்பது, சீனாவே எதிரி அல்லது, பாகிஸ்தானுக்கு உதவுவதால் சீனா எதிரி என்றெல்லாம் கூறி சீனப் பொருட்களைப் புறக்கணித்து தேசிய உணர்வை வெளிப்படுத்த வேண்டும் என்று கூக்குரல்கள் எழுப்பப்படுவதும் வாடிக்கையாகவே மாறிவிட்டன. அந்த வரிசையில், இந்த முறை சீன எல்லை! சீன எல்லையில் நடப்பவை குறித்து பலரும் தெளிவாக விளக்கிவிட்டார்கள். ஆனால், அதனுடன் எழுந்த தேசபக்தக் குரல்கள், அரசின் நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றை கவனிக்க வேண்டியுள்ளது.


59 சீன செயலிகளைத் தடை செய்ததன்மூலம் சீனாவிற்கு மிகப்பெரிய அதிர்ச்சியை அரசு அளித்திருப்பதாகவும், மக்கள் தங்கள் பங்கிற்கு சீனப் பொருட்;களைப் புறக்கணிக்க வேண்டும் என்றும் தேசபக்தர்கள் குதிக்கிறார்கள். அவற்றில் கணிசமானவை, இன்றுவரை கட்டணம் எதுவும் வசூலிக்கவே தொடங்கவில்லை என்பதையெல்லாம்கூட விட்டுவிடுவோம். ஆனால், மே 5இலிருந்து எல்லையில் மோதல்கள் நடப்பதாகக் கூறிய அரசு, ஜூனில் ரூ.1126 கோடிக்கான ஒப்பந்தத்தை ஷாங்காய் டன்னல் எஞ்சினியரிங் கம்பெனி என்ற சீன நிறுவனத்திற்கு வழங்கியது. தலைநகரப் பகுதியில் தரையடி அதிவேக சுரங்க ரயில் பாதை அமைக்கும் பணிக்கான இந்த டெண்டரில், தொழில்நுட்ப அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 5 நிறுவனங்களில் 3 இந்திய நிறுவனங்களும் இருந்தன. செலவு அடிப்படையில் மிகக் குறைந்த தொகையைக் குறிப்பட்ட சீன நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டது. அப்படித்தான் தேர்ந்தெடுக்கப்படவும் முடியும் என்பதுதான் உண்மை.

மக்களைச் சீனப் பொருட்களைப் புறக்கணியுங்கள் என்று கோரிவிட்டு, அரசு சீன நிறுவனத்திற்கு ஒப்பந்தம் அளிக்கிறது என்ற விமர்சனம் எழுந்த ஓரிரு நாட்களில், கிழக்கத்திய சரக்குப் பாதைக்கான ரூ.470 கோடி ஒப்பந்தம் பெற்றிருந்த சீன நிறுவனமான சைனா ரயில்வே சிக்னல் அண்ட் கம்யூனிகேஷன் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஏதோ சீன நிறுவனங்களை அரசு புறக்கணிப்பதான தோற்றத்தை இதன்மூலம் ஏற்படுத்த முயன்றாலும், உண்மையில், 2016இலிருந்து இதுவரை அந்தப் பணியில் 20 சதவீதம் அளவுக்கு மட்டுமே நிறைவுற்றிருக்கிறது என்பதுதான் உண்மையான காரணம். ஆனாலும், அது பன்னாட்டு விதிகளுக்கு முரணானது என்று அந்நிறுவனம் இந்திய ரயில்வேமீது வழக்குத் தொடுத்துள்ளது என்பதுடன், அந்தப் பணிக்கு கடனுதவி அளிக்கும் உலக வங்கியும், ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதை ஏற்பதாக இன்னும் அறிவிக்கவில்லை.

அதாவது, இத்தகைய பன்னாட்டு வணிக ஒப்பந்தங்களிலெல்லாம், பிற பிரச்சினைகள் தாக்கம் ஏற்படுத்த முடியாது என்பதையும், அப்படி ஏற்படுத்தினால் அது இந்தியாவின் வணிக நலன்களுக்குக் கேடாக அமையும் என்பதையும்தான் இவை விளக்குகின்றன. ஒரு பன்னாட்டு நிறுவனத்தின்(உதாரணம்: ஹ்யூண்டாய், நோக்கியா) இந்தியத் தொழிலாளர்களோ, அல்லது பன்னாட்டு நிறுவனத்திற்கு(உதாரணம்: ஸ்டெர்லைட்) எதிராக இந்திய மக்களோ போராடினால், முதலீட்டாளர்கள் நம்பிக்கை இழந்துவிடுவார்கள் என்று கூறுகிற அரசு, தனக்கு நெருக்கடி ஏற்படும்போது மட்டும், பன்னாட்டு நிறுவனங்களை எதிர்க்குமாறு மக்களை திசை திருப்புகிறது என்பதுதான் புரிந்துகொள்ள வேண்டிய உண்மை.

சரி, இந்தியாவுக்கு எதிராகச் சீனா என்ன செய்தாலும், சீனப் பொருட்களைப் புறக்கணிக்கவே கூடாதா? கூடாதா என்ற கேள்வியைவிட, முடியுமா முடியாதா என்ற கேள்விதான் பொருத்தமாக இருக்கும். உற்பத்தி சமூக உடைமையாதல் முதலாளித்துவப் பொருளாதாரக் கட்டமைப்பின் ஒரு முக்கியமான முன்னேற்றம். அதாவது, தனக்காக உற்பத்தி செய்து கொள்ளாமல், சமூகத்துக்காக(முதலாளித்துவக் கட்டமைப்பில் சந்தை!) உற்பத்தி செய்தல். எப்போது அது சந்தைக்கான உற்பத்தியாக மாறிவிட்டதோ, அப்போதே சந்தையை விரிவாக்குவதும் அடிப்படையான தேவைகளுள் ஒன்றாகிவிடும். அதனால்தான், திருப்பூரில் உற்பத்தி செய்யப்படும் பின்னலாடைகளை, திருப்பூருக்கோ, தமிழ்நாட்டுக்கோ அல்லது இந்தியாவுக்கோ மட்டும் என்று வைத்துக்கொள்ள முடியாமல், உலகம் முழுவதும் சந்தைகளைத் தேட வேண்டியிருக்கிறது. அதையெல்லாம் விட்டுவிட்டு, தற்சார்பு என்ற பெயரில் (வணிகத்தில்) இந்தக் கோட்டைத் தாண்டி நானும் வரமாட்டேன், நீயும் வரக்கூடாது என்றெல்லாம் கூறுவது, நமது உற்பத்திகளைச் சுருக்கிக்கொள்வதாக மட்டுமல்ல, பல உற்பத்திகளை நடத்த முடியாத நிலையையும் ஏற்படுத்தும். ஏனென்றால், முழுமையாக உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் மட்டுமின்றி, பல தொழில்களுக்கான மலிவான மூலப்பொருட்களும் இறக்குமதி செய்யப்படுகின்றன. அவை கிடைக்காவிட்டால், அந்தத் தொழில்கள் லாபரகமாகச் செயல்பட முடியாது.


உதாரணமாக, சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுவற்றில், 12 சதவீதம் 'ஆர்கானிக் கெமிக்கல்ஸ்' என்ற பிரிவினைச் சேர்ந்தவை. இவைதான் இந்திய மருந்து உற்பத்தித் துறைக்கான மூலப்பொருட்களில் 66 சதவீதமாக உள்ளன. கொரோனா தடைகளால், வெளிநாடுகளிலிருந்து சரக்குப் போக்குவரத்துத் தடைப்பட்டிருந்ததால், இந்த கரிம வேதிமங்களும் வரவில்லை. அதனால், உற்பத்தி குறைந்துபோன மருந்துகளில் ஹெபாரின் ஊசியும் ஒன்று. கொரோனா சிகிச்சையிலும்  பயன்படுத்தப்படும் இந்த மருந்தை, போதிய அளவு உற்த்தி செய்ய முடியாமற்போனதால், இந்திய மருந்து விலை ஆணையமே 50 சதவீத விலை உயர்வை அனுமதித்தது என்பது நடப்பு உதாரணம். சீன வைரஸ் என்று முதலில் ட்ரம்ப் ஒதுக்கியதால் கொரோனா அமெரிக்காவைத் தாக்காமல் விடவில்லை என்பதைப் போலவே, சீனப் பொருட்கள் என்று ஒதுக்குவதும், இந்தியப் பொருளாதாரத்திலும், தொழில்துறையிலும் பாதிப்பை ஏற்படுத்தாமல் விடப்போவதில்லை. அதைப் போலவே, 5ஜி தொழில்நுட்பத்தில் முன்னணியில் இருக்கும் ஹுவாவே நிறுவனத்தையும், இசட்.டி.இ. நிறுவனத்தையும் அரசுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனங்களான எம்டிஎன்எல்லும், பிஎஸ்என்எல்லும் புறக்கணிக்க வேண்டும் என்ற அறிவுறுத்தலும். இதுவும், அரசுத்துறை நிறுவனங்களில் கட்டண உயர்வுக்குக் காரணமாக அமைந்து, போட்டியிடும் திறனைக் குறைத்துவிடும் என்பதுதான் வெளியில் தெரியாத உண்மை.

எனவே, சீனப் பொருட்களை மட்டுமல்ல, வேறு எந்த நாட்டின் பொருட்களையுமே, வணிகம் தொடர்பில்லாத வேறு காரணங்களுக்காகத் தவிர்ப்பது என்பது, தவிர்க்கிற நாட்டின் பொருளாதாரத்திற்கு இழப்பாகவே முடிகிற காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. பாதுகாப்புத் துறைக்கு எவ்வளவு அதிக ஒதுக்கீடு செய்தாலும், எந்த நாடும், எந்தப் பிரச்சினைக்கும் போரைத் தீர்வாகத் தேர்ந்தெடுக்க முடியாத, அப்படியே தேர்ந்தெடுத்தாலும், அப்போதும் வணிக உறவுகளைத் துண்டித்துக்கொள்ள முடியாத காலம் இது. எனவே, எல்லை முதலான பிரச்சினைகளைப் பேச்சு வார்த்தைகள் மூலம்தான் தீர்ப்பதுதான் சரி என்கிற நிலையில், உள்நாட்டு நெருக்கடிகளை மறைக்க எல்லையில் இல்லாத பிரச்சினையை இருப்பதாகத் தோற்றம் ஏற்படுத்துவது, இந்தியப் பொருளாதாரத்தை மேலும் பின்னடைவுக்கே இட்டுச் செல்லும்!

-அறிவுக்கடல்