இந்த வலைப்பூவைத் தொடங்கிய காலத்தில், பல தொடர்ச்சியாக எழுத வேண்டிய பணிகள் இருந்தன. அப்படி சங்கக்குரல் உள்ளிட்ட இதழ்களில் வெளியானவற்றை மீண்டும் இங்கு பதிவிட நான் விரும்பாததால், இது அப்படியே நின்று போனது. இப்போது, இதற்காகவே தொடர்ந்து எழுதத் திட்டமிட்டிருக்கிறேன். இதில் பதிவிடப்படுபவற்றை பிறர் பயன்படுத்திக்கொள்ளத் தடையில்லை!
-அறிவுக்கடல்

Monday, November 10, 2014

கெட்டிக்காரன் புளுகு!


கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள் என்பார்கள். ஜன்தன் யோஜனாவுக்கும் அதே கதைதான்! ஏழ்மையை விரட்ட, நிதித் தீண்டாமையை விரட்ட என்றெல்லாம் பிரமாதமாக விளம்பரப்படுத்தப்பட்ட இத்திட்டத்தின்கீழ் முதல் கட்டமாகச் சுமார் 7 கோடி வங்கிக் கணக்குகள் துவங்கப்பட்டுள்ளன. ஏழ்மையை விரட்ட வந்த திட்டம், எனவே, 7 கோடிப்பேர் பணக்காரர்களாகி விட்டார்கள் என்றுதானே அர்த்தம்...? பணக்காரர்களாக வேண்டாம், ஏழைகளாக இல்லாமல் உயர்ந்திருக்கவாவது வேண்டுமே? அதெல்லாம் தெரியாது. ஆனால், திட்டத்தில் சேர்ந்து வங்கிக் கணக்குத் துவங்குபவர்களுக்கு இலவசக் காப்பீடு என்று அறிவிக்கப்பட்டதல்லவா, அது 5 கோடிக்கும் மேற்பட்டோருக்கு இல்லை என்று மட்டும் செய்தி வெளியாகியுள்ளது. ஏன்?
அவர்கள் அந்த வங்கிக் கணக்கில் பணம் போடவில்லையாம்! ஏழ்மையை விரட்ட என்றால் ஏழைகளிடமிருந்துதான் விரட்ட வேண்டும். அப்படி ஏழைகளுக்கு வங்கிக் கணக்குத் துவங்கி விட்டுப் பணம் போடவில்லை என்றால்...? வங்கியில் போடப் பணம் இருந்தால் அவன் ஏன் ஏழையாக இருக்கிறான்?
அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது என்கிறது ரூ.1 லட்சம் விபத்துக் காப்பீட்டை அளிக்க வேண்டிய எச்டிஎஃப்சி எர்கோ என்ற தனியார் பொதுக்காப்பீட்டு நிறுவனம்! கணக்கில் பணம் போட்டால்தான் காப்பீடாம்! அதுவும், ஏதோ ஒருமுறை பணம் போட்டாலும் போதாதாம், விபத்து நடந்தால், அதற்கு முந்தைய 45 நாட்களில் கணக்கில் ஏதாவது பரிவர்த்தனை செய்யப்பட்டிருந்தால் மட்டுமே காப்பீடு என்கிறது இந்நிறுவனம்! ஆக, கணக்குத் துவங்கிவிட்டோம், ஏழ்மையை விரட்டிவிட்டோம், இலவசக் காப்பீடுவேறு அளித்துவிட்டோம் என்பதெல்லாம் கெட்டிக்காரன் புளுகுதானே?
துவங்கப்பட்டுள்ள 7 கோடி வங்கிக் கணக்குகளில் 1.71 கோடி கணக்குகளில், தங்களிடம் இருந்த கொஞ்ச நஞ்சப் பணத்தையும் ஏழைகள் செலுத்திவிட்டனர். மீதமுள்ள 5 கோடியே சொச்சம் கணக்குகளுக்குத்தான் இந்தக் கதை! சரி... ஏதோ ரூ.5 ஆயிரம் மிகைப் பற்று என்றார்களே, அதை  பணம் செலுத்தாத இந்த ஏழைகள் எடுத்திருக்க முடியாதே, அதனால் கணக்கில் ரூ.5,000 இருப்பதாகக் கருதலாமே...? கேள்வியெல்லாம் நல்லாத்தான் இருக்கு, ஆனா... 6 மாதத்துக்கு கையில இருக்கிற எல்லாப் பணத்தையும் போட்டு எடுத்து திருப்திகரமா வரவு செலவு செஞ்சாத்தான் அந்த ரூ.5,000 கொடுக்கிறதப் பத்தி யோசிக்கவே செய்வாங்களாம்... அப்ப அதுவும் டுபாக்கூரா?
அவசரப் படாதீங்க, கொஞ்சநாள்ல இலவசக் காப்பீடு கொடுத்திடுவோம் என்கிறார் இந்திய தேசிய வழங்குதல்கள் கழகத்தின் (NPCI) நிர்வாக இயக்குனர் ஏ.பி.ஹோட்டா. எப்படி என்றால், இந்தக் கணக்குகள் துவங்கியதே, மானியங்களை ரொக்கமாக வழங்குவதற்காகத்தானே, அதனால், பல்வேறு மானியங்கள் இந்தக் கணக்குகளுக்கு வர ஆரம்பித்துவிடும், அப்புறம் வரவு செலவு தானா நடக்கும்ல என்கிறார். ஏற்கெனவே, 54 மாவட்டங்களில் முன்னோடியாக, ஆதார் எண் இல்லாதவர்களுக்கும் சமையல் எரிவாயுவுக்கான மானியம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கும் திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படவிருக்கிறதா
ம்! ஆக, ஏழ்மை ஒழிப்பு, நிதித்தீண்டாமை மறுப்பு, இலவசக் காப்பீடு எல்லாம் தூண்டிலில் வைக்கப்பட்ட புழுக்களே... இறுதி இலக்கு, ரேசனை ஒழித்து, மானியத்தை ரொக்கமாக வழங்குவதே! இடையில் அரசுக்குக் கூடுதல் பலன், ஏழைகளிடமிருக்கும் கொஞ்ச நஞ்சப் பணத்தையும் வங்கிக்குக் கொண்டுவந்து, ஏதாவது ஒரு தனியார் முதலாளிக்கு, சிண்டிகேட் வங்கி கொடுத்ததுபோலக் கடனாகக் கொடுத்துவிட்டு, வராக்கடன் என்று ஏப்பம் விடுவது!
ஜன்தன் யோஜனாவின் நீலச்சாயம் வெளுத்துப்போச்சு... டும், டும், டும்!

திரைக்கதையும், காமெடி ட்ராக்கும்!


பொதுவாகத் திரைப்படங்களில் காமெடி ட்ராக் என்று ஒன்று இணைக்கப்படும். மிகவும் சீரியசான அழ வைக்கும் திரைக்கதையில்கூட காமெடி ட்ராக் என்று ஒன்று இருக்கும். (இன்றைய திரைப்படங்களில் படமே (காமெடிப் படங்கள் அல்ல...) காமெடியாகி, வெற்றிக்குத் தேவை குத்துப் பாட்டும் கவர்ச்சி நடனமும் என்றாகிவிட்டது தனிக் கதை...!)
கிட்டத்தட்ட மோடி அரசும் அவ்வாறான ஒரு உண்மையான திரைக்கதையும் தனித்தனி ட்ராக்குகளுமாகச் சென்று கொண்டிருக்கிறது! உண்மையான திரைக்கதை அந்நிய இந்திய பெரு முதலாளிகளுக்கும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் தேவையானவற்றைச் செய்து, இந்தியாவை முழுமையாக விற்பது என்பது என்றாலும், எளிய மக்களை ஈர்க்க ஜன்தன் யோஜனா, மோடி கேர் என்பதான ட்ராக்குகளும், படித்த மேதாவி வர்க்கங்களை ஈர்க்க கிளீன் இந்தியா போன்ற ட்ராக்குகளுமாக வெற்றி நடை போடுகிறது!
அந்த வரிசையில் தற்போது "டெலிட் வாட்ஸ்ஆப்" சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கிறது! வாட்ஸ்ஆப் என்பது ஆண்ட்ராய்ட் கைப்பேசிகளில் பயன்படுத்தப்படுகிற, இலவசமாகக் குறுஞ்செய்திகளையும் (நீண்ட நெடிய செய்திகளையும்கூட!), படங்களையும், வீடியோ முதலானவற்றையும் பகிர்ந்துகொள்ளும் மென்பொருள். இணையத்தைப் பயன்படுத்தும் இந்த மென்பொருள் முதலாண்டு இலவசமாகவும், அடுத்த ஆண்டிலிருந்து ஆண்டுக்கு ஒரு டாலர் கட்டணத்துடனும் செயல்படுகிறது. இந்த, ஆண்டுக்கு ஒரு டாலர் என்பதை ரூ.56 என்று கணக்கிட்டால், 20 கோடி இந்தியர்கள் பயன்படுத்துவதாகக் கொண்டால், அந்த அமெரிக்க நிறுவனத்துக்கு ஆண்டுக்கு ரூ.1120 கோடி செல்கிறது, சீனாகூட தனி மென்பொருள் வைத்துள்ளது, எனவே வாட்ஸ்ஆப்-ஐ அழியுங்கள் என்பதுதான் தற்போதைய முழக்கம்!
உண்மையில் வாட்ஸ்ஆப் இருப்பதால் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இழப்பைச் சந்திப்பதாகப் புலம்புவது உண்டு. ஏனெனில் எம்எம்எஸ் எனப்படும் மல்டிமீடியா மெசேஜ் மூலமாக மட்டுமே அனுப்பக்கூடிய பலவற்றை வாட்ஸ்ஆப் மூலம் அனுப்பமுடிவதுடன், எம்எம்எஸ், எஸ்எம்எஸ் ஆகிவற்றைவிட வாட்ஸ்ஆப் பயன்படுத்துதற்கான இணைய இணைப்பிற்கு தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்குக் கிடைக்கும் கட்டணம் குறைவு என்பதுமாகும்!
வாட்ஸ்ஆப் நிறுவனத்துக்குச் செல்லும் ஆண்டுக்கு ரூ.1120 கோடிதான் பெரிய செய்தி என்றால், இந்தியாவில் அனுமதிக்கப்பட்டுள்ள அந்நிய முதலீடுகளுக்கான லாபம்? இந்தியாவில் 2001-12 காலத்தில் வந்துள்ள அந்நிய முதலீடு (FIPB Route, RBI Automatic Route & Acquisition Route), இந்திய அரசின் தொழில் வர்த்தகத்துறை அமைச்சத்தின் புள்ளிவிபரங்களின்படி ரூ.10,24,812 கோடி. இந்த முதலீடு ஈட்டிய லாபத்திலிருந்து செய்யப்பட்ட மறு முதலீடு மட்டும் (அதே அமைச்சகத்தின் புள்ளிவிபரப்படி) ரூ.4,15,122 கோடி. இது லாபத்தில் ஒரு பகுதிதான்! அவர்கள் நாடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்ட தொகை பற்றிய விபரம் இந்த தளத்தில் இல்லை! ஆயிரம் கோடி பெரியதா, 4 லட்சம் கோடி பெரியதா?
கேட்டால், அந்நிய முதலீடு இந்தியாவை வளர்க்க, வேலை வாய்ப்பை உருவாக்க வருகிறது என்பது அரசின் வாதம்! நிச்சயம் ஏற்றுக் கொள்ள வேண்டும்!
ஆனால் இதே 2001-12 காலத்தில் இந்தியாவிலிருந்து, இந்தியப் பெரு முதலாளிகளால், கார்ப்பரேட் நிறுவனங்களால் வெளிநாடுகளில் செய்யப்பட்ட முதலீடு (CARE Ratings இணையதள தகவல்படி) ரூ.7,30,678 கோடி! அதாவது, இந்தியாவிற்கு வந்த அந்நிய முதலீட்டின் அளவில் 71.3% அளவிற்கு இந்தியாவிலிருந்து அந்நிய நாடுகளுக்கு முதலீடு சென்றுள்ளது! 2014 நிதியாண்டில்கூட, இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்குச் சென்ற முதலீடுகள் ரூ.1,75,800 கோடி. இது எதற்காக அந்நிய நாடுகளுக்குச் சென்றது? அந்த நாடுகளை வளர்க்கவும், அங்கு வேலை வாய்ப்பை உருவாக்கவுமா? இந்தியா அந்நிய நாடுகளிடம் கையேந்தும்போது, இங்கு முதலீடு செய்யுமாறு வலிந்து அழைக்கும்போது, இங்கிருந்து முதலீடு வெளிநாட்டுக்குச் சென்றதேன்? லாபத்தைத் தவிர வேறு நோக்கம் இருக்க முடியுமா?
ஆனால், இந்தியாவுக்கு வருகிற அந்நிய முதலீட்டுக்கு ஆயிரத்தெட்டு சலுகைகள், வரி விடுமுறைகள், இன்னும் லாப உத்தரவாதம்கூட வழங்கப்படுகிறதே? உதாரணம் : நோக்கியா! நோக்கியா செய்த ரூ.1125 கோடி முதலீட்டுக்கு, வழங்கப்பட்ட சலுகைகள் மட்டும் ரூ.10 ஆயிரம் கோடிக்குமேல்!
இங்கிருந்து வெளிநாடுகளுக்குச் சென்ற முதலீடுகளுக்கு அதெல்லாம் வழங்கியிருந்தால் இங்கேயே இருந்திருக்காதா? வழங்கப்பட்டது என்பதற்கு உதாரணம் குஜராத்தில் அமைக்கப்பட்ட டாடா நானோ தொழிற்சாலை! ஒவ்வொரு நானோ காருக்கும் குஜராத் அரசு வழங்கிய உதவி ரூ.86 ஆயிரம் என்று சொல்லுமளவுக்கு சலுகைகள் வழங்கப்பட்டது. ஆனாலும், அதிக லாபம் தேடி வெளிநாட்டுக்குச் செல்கிறது. எல்பிஜி மானியம் வாங்காதீர்கள், தேசப்பற்றுள்ள இந்தியர்களாக இருங்கள் என்று கூவுவதுபோல, இந்தியாவில் முதலீடு செய்யுங்கள், தேசப்பற்றுள்ள இந்தியராக இருங்கள் என்று அழைக்க மோடி அரசால் முடியாதா? அவற்றை இங்கேயே முதலீடு செய்ய வைத்தால், பாதுகாப்புத் துறையில், ரயில்வேயில் என்று சகல துறைகளிலும் அந்நிய முதலீட்டை அனுமதிக்க வேண்டிய அவசியமே வராதே?
அந்நிய முதலீட்டால் புதிய தொழில்நுட்பம் வரும் என்கிறது அரசு! தொழில்நுட்பம் தேவை என்ற வெற்றுக் குரலை, மங்கள்யான் அனுப்பியபிறகும் நம்பமுடிகிறதா? கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தை எந்த நாடும் தர முன்வரவில்லையே? தரவில்லை என்றதும் நம்மால் உருவாக்க முடிந்ததே? வேறென்ன தொழில் நுட்பத்தைத் தரப்போகிறார்கள் என்று பாதுகாப்புத்துறையையே திறந்துவிடுகிறார் மோடி?
சீனா வாட்ஸ்ஆப் பயன்படுத்தவில்லை என்கிறார்கள். (வாட்ஸ்ஆப் சீனாவில் அனுமதிக்கப்பட்டுள்ளது என்பது தனிச் செய்தி!) சீனா ஜிமெயில் முதலானவற்றைத் தடை செய்துள்ளது என்பது பாதுகாப்புக் காரணங்களுக்காக. இங்கு எல்லாக் கதவையும் விரியத் திறந்துவிட்டு என்ன டெலிட் வாட்ஸ்ஆப்?
மோடி அரசின் உண்மையான திரைக்கதை மேட் இன் இந்தியா இல்லை. மேக் இன் இந்தியாவாக அவர்களால் முடிந்தது காமெடி ட்ராக்கும் குத்துப் பாடல்களும் மட்டுமே...!
உண்மையில், இங்கு முதலீட்டுக்கு நிதி இல்லாததால் அந்நிய முதலீடு அனுமதிக்கப்படவில்லை. அந்நிய நிறுவனங்கள் இந்தியாவில் லாபம் சம்பாதிப்பதற்காக, சரியாகச் சொன்னால் ஆக்கிரமிப்பதற்காக மட்டுமே அந்நிய முதலீடு அனுமதிக்கப்படுகிறது. இந்திய நிறுவனங்கள் எங்கு லாபம் கிடைக்குமோ அங்குதான் முதலீடு செய்யும். அவர்களுக்கு மேக் இன் இந்தியா எல்லாம் கிடையாது! இவர்களின் லாபத்திற்கு பொதுத்துறைகளை விற்பது, ரயில்வே முதலான துறைகளைத் திறந்து விடுவது, நிலக்கரி முதலான இயற்கை வளங்களை வாரிக்கொடுப்பது முதலான எல்லா வசதிகளையும் செய்து தருவதுதான் திரைக்கதையின் மெயின் ட்ராக். ஆனால், கிளீன் இந்தியா, டெலிட் வாட்ஸ்ஆப் முதலான காமெடி, கவர்ச்சி ட்ராக்குகள் மட்டுமே நமக்குச் சொல்லப்படுகின்றன. மெயின் ட்ராக்கை மக்களுக்கு விளக்கத் தவறினால் அய்ந்தாண்டு முடிவில் இந்தியா இருக்காது!

Saturday, November 1, 2014

எதுவுமே கிடைக்காட்டியும்... நாங்கள்லாம்...!

வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த மூன்று நண்பர்களிடையே, யாருடைய நாடு பழம்பெருமை வாய்ந்தது, யாருடைய நாட்டில் முன்னேறிய தொழில்நுட்பம் இருந்தது என்று விவாதம் எழுந்தது.
முதல் நண்பர் சொன்னார், "எங்கள் நாட்டில் நடந்த அகழ்வாராய்ச்சிகளின்போது, நீண்ட கம்பிகள் கிடைத்தன, அதனால் எங்கள் நாட்டில் அந்தக் காலத்திலேயே மின்சார வசதிகள் இருந்தன என்று முடிவுக்கு வந்தோம், எனவே எங்கள் நாடுதான் தொழில்நுட்பத்தில் முன்னோடி!"
அடுத்தவர் சொன்னார், "எங்கள் நாட்டில் பூமியைத் தோண்டியபோது, மெல்லிய கம்பிகள் கிடைத்தன, அதனால் அந்தக்காலத்திலேயே எங்கள் நாட்டில் தொலைபேசி வசதிகள் இருந்திருக்கும் என்ற முடிவுக்கு வந்தோம், மின்சாரத்தைவிட தொலைபேசி மேம்பட்டது, எனவே, எங்கள் நாடுதான் அதிகத் தொழில்நுட்பத்தைக் கொண்டிருந்தது...!"
இறுதியாக, மூன்றாவது நண்பர் சொன்னார், "எங்கள் நாட்டில் மண்ணுக்கடியிலிருந்து எதுவுமே கிடைக்கவில்லை, எனவே அந்தக் காலத்திலேயே எங்கள் நாட்டில் Advanced wireless communication systems இருந்திருக்கிறது, உங்கள் இருவரின் நாட்டைவிட எங்கள் நாடே முன்னேறியது........!!!!!!!!!"
வரலாற்றுக்கு முந்தைய புராண காலங்களிலேயே இந்தியா மரபணு விஞ்ஞானத்திலும், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையிலும் சிறந்து விளங்கியது என்று பிரதமர் மோடி பேசியிருப்பதற்கும், இதற்கும் தொடர்பிருப்பதாக நீங்கள் எண்ணிக்கொண்டால், அதற்கு நான் பொறுப்பல்ல......

Wednesday, September 17, 2014

நமக்கு எப்போது வரும்?

ஏதாவது ஒரு ஊரின் ஏதாவது ஒரு சாலையின் ஏதாவது ஒரு சிக்னலில் நின்று பாருங்கள்...

>சிகப்பிலிருந்து பச்சை மாறியதும், சீறிச் செல்லும் வாகனங்கள்...
>முன்னுள்ள வாகனம் செல்லும்வரை பொறுமையின்றி, வழியிருந்தால், தடுப்பைத் தாண்டி வலதுபுறம் நுழைந்து போகும் வாகனங்கள்...
>பச்சை வரும்வரை பொறுமையின்றி இண்டு இடுக்குகளில் முன்னேறி, முன் வரிசைக்கு வரும் வாகனங்கள்...
>பச்சை மாறி சிகப்பே வந்து விட்டாலும், அதன்பின்னும் சில நொடிகளுக்குக் சீறும் வாகனங்கள்...
>அதற்குள் அடுத்த சாலையிலிருந்து சீறிய வாகனங்களுடன் மோதல் வேறு...
>இவர்கள் எல்லாம் நேரந்தவறாமையை முதன்மையாகக் கொண்டவர்களோ என்றென்னும் வகையில், சாலை விதிகளைத் துச்சமாக மதித்துப் பறக்கும் வாகனங்கள்...
>வழிவிடக் கோரி ஓயாமல் ஒலிக்கும் 'ஹார்ன்கள்'...

ஆனாலும் ஏன் 'இந்தியன் பங்ச்சுவாலிட்டி...'?

இவ்வளவு வேகமாகப் போயும், ஏன் இந்த நிலை?

வேகமாகச் செல்வது சரியான நேரத்திற்குச் செல்வதற்காக அல்ல!
சக மனிதனைவிடக் கொஞ்சமே கொஞ்சமாவது தனக்குக் கூடுதலாக வேண்டும்...
கியூவில் நிற்கும்போதுகூட, ஒரு ஆளை முந்தினாலும் ஏற்படும் மகிழ்ச்சி இருக்கிறதே...
அதுதான், சாலையில் போகும்போது, சிக்னலில் நிற்கும்போது...
எல்லாவற்றிலும், கொஞ்சம்... கொஞ்சமே கொஞ்சம்... முன்னால் போனால்தான் திருப்தி...
அதற்காக விதிகளை மீறலாம்... அடுத்தவருக்கு இடைஞ்சல் செய்யலாம்...
நாலு பேருக்கு நல்லதுன்னா...
அடச்சே,
நம்ம ஒருத்தருக்கு நல்லதுன்னா எத்தனை பேருக்கு வேணாலும், என்ன வேணாலும் செய்யலாம்...

'கொசுறு'க்கு ஆசைப்பட்டே, கோணலாக்கிவிட்டோம்... எல்லாவற்றையும்!

நமது நாட்டின் சட்டங்களை நாமே மதிக்காவிட்டால், மற்றவர்கள் எப்படி மதிப்பர்?
நமக்குரிய முறை வரும் என்ற பொறுமையும்,
நமது நாட்டின் சட்டங்களை நாம் மதிக்க வேண்டும் என்ற பொறுப்புணர்வும்
நமக்கு எப்போது வரும்?