இந்த வலைப்பூவைத் தொடங்கிய காலத்தில், பல தொடர்ச்சியாக எழுத வேண்டிய பணிகள் இருந்தன. அப்படி சங்கக்குரல் உள்ளிட்ட இதழ்களில் வெளியானவற்றை மீண்டும் இங்கு பதிவிட நான் விரும்பாததால், இது அப்படியே நின்று போனது. இப்போது, இதற்காகவே தொடர்ந்து எழுதத் திட்டமிட்டிருக்கிறேன். இதில் பதிவிடப்படுபவற்றை பிறர் பயன்படுத்திக்கொள்ளத் தடையில்லை!
-அறிவுக்கடல்

Wednesday, January 27, 2021

பொது விடுமுறை...!

இன்று தைப்பூசத்திற்காக அரசு விடுமுறை... அரசு விடுமுறைகள் பற்றியே மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பது என் நிலைப்பாடு. பொதுவான விடுமுறைகளை ரத்து செய்துவிட்டு, அவற்றை பணியாளர்களின் விடுப்புக் கணக்கில் சேர்த்துவிடலாம் என்பது என் கருத்து. விடுமுறையும் அவர்களுக்குத் தேவையானபோது பயன்படும், அலுவலகங்களும், தொழிற்சாலைகளும் தொடர்ந்து இயங்கும். இதெல்லாம் சாத்தியமா? இந்த உதாரணத்தைப் பார்ப்போம்!

 

சோவியத் ஒன்றியத்தில் புதிய நாட்காட்டி ஒன்றை 1923இல் ஸ்டாலின் அறிமுகப்படுத்தினார். புரட்சி முடிந்ததுமே, 1918இலேயே சோவியத் ஒன்றியம், உலகோடு ஒத்திசைந்து, கிரிகோரியன் நாட்காட்டிக்கு மாறியிருந்தது. 1923இல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தப் புதிய நாட்காட்டியில் வாரம் மட்டும் மாற்றியமைக்கப்பட்டது. வாரத்திற்கு 5 நாட்கள்தான். கிழமைகள் கைவிடப்பட்டு, ஒவ்வொரு நாளுக்கும் ஒரு வண்ணம் தரப்பட்டது. அவ்வாறே குடிமக்களுக்கும் வண்ணம் ஒதுக்கப்பட்டது. பச்சை வண்ணம் கொண்டவருக்கு, பச்சை நாளில்(கிழமை) ஓய்வு. இதனால், உலகின் மற்ற நாடுகளின் தொழிலாளர்களுக்கு ஏழு நாள் கொண்ட வாரத்திற்கு, ஒரு நாள் வீதம் ஆண்டிற்கு 52 ஓய்வு நாட்கள் கிடைத்தால், சோவியத்தின் தொழிலாளர்களுக்கு 5 நாளுக்கு ஒரு நாள் வீதம் ஆண்டிற்கு 72 நாட்கள்(365இல் 5 நாட்கள் புரட்சி தொடர்பான பொது விடுமுறை நாட்கள்) ஓய்வு கிடைத்தன. ஆனால், மறுபுறம் பிற பொதுவான விடுமுறைகள் நீக்கப்பட்டதால், உழைக்கும் திறன் கொண்ட மனிதர்களில் 80% பேர் ஆண்டின் எல்லா காலகட்டத்திலும் உழைத்துக்கொண்டே இருந்தனர், கூடுதல் ஓய்வும் பெற்று! சோவியத் ஒன்றியத்தின் பிரமாண்ட வளர்ச்சியைத் தொடங்கி வைத்ததில் ஸ்டாலின் கொண்டுவந்த இந்த நாட்காட்டிக்கு முக்கியப்பங்கு உண்டு. குடும்பத்தினருக்கு மாறுபட்ட வண்ணங்கள் இருந்ததால், மாறுபட்ட ஓய்வு நாட்கள் இருந்தது உள்ளிட்ட காரணங்களால், 1929இல் 6 நாள் வாரமாகி, 1940இல் 7 நாள் வாரத்திற்கே சோவியத் மாறியது. ஆனால், அதிக ஓய்வையும் அளித்து, அதிக உற்பத்தியையும் உருவாக்கிய இந்த முயற்சி நிச்சயமாக மீண்டும் கவனிக்க வேண்டியதாக இன்று இருக்கிறது.

இன்று எல்லா நிறுவனங்களும் 24/7 சேவை என்று பேசத் தொடங்கியிருக்கின்றன. உலகின் முதல் இரண்டு பொருளாதாரங்களின் ஜிடிபியில் சேவைத் துறைகளே (அமெரிக்கா 80%, சீனா 51.6%) மிகப்பெரும் பங்கை அளிக்கின்றன. வேட்டைக்கார(ஹண்ட்டர் கேதரர்) வாழ்க்கையிலிருந்து பயிரிடக் கற்றபோது மனிதனுக்கு நாள் முழுவதும் விவசாயம்தான் வேலையாக இருந்தது. சித்திரமும் கைப்பழக்கம் என்று அதன் நுட்பங்களைக் கற்றபின், உழைப்பும், நேரமும் மிச்சமாகி, தொழில்கள் உருவாயின. அவற்றால் உருவான கருவிகளும், தொழில்நுட்பங்களும் விவசாயத்துக்கான நேரத்தையும், உழைப்பையும் மேலும் குறைத்ததோடு நில்லாமல், அந்தக் கருவிகளை உற்பத்தி செய்வதிலும் அதே தாக்கத்தை ஏற்படுத்தியதால், அவற்றிற்குத் தேவையானவையும் குறைந்தன. அவற்றில் உபரியான(வேலை வாய்ப்பிழந்த!) மனிதர்கள், (வேலை வாய்ப்பிருந்து)உழைப்பு போக எஞ்சிய நேரத்தைக் கொண்டாட விரும்பிய மனிதர்களுக்கு(டாக்சி ஓட்டுவதிலிருந்து, ஓட்டலில் பரிமாறுவது என்று மிக நீண்ட பட்டியலாக)  சேவை செய்பவர்களாகி சேவைத்துறையாகவே ஆனது. 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிறந்திருந்த அந்த சேவைத்துறை, இன்று பொருளாதாரங்களை நிர்ணயிக்கிற ஒன்றாக வளர்ந்திருக்கிறது. முதலிரண்டு நாடுகளின் பொருளாதாரத்தில் தொழில்துறையும்- அமெரிக்கா 19.1%, சீனா 40.5%, விவசாயமும் - அமெரிக்கா 0.9%, சீனா 7.9% குறைந்த பங்கையே அளிக்கின்றன என்பதுடன்,  சேவைத்துறையின் பங்கு மிகவேகமாக உயர்ந்து கொண்டேயும் இருக்கிறது. அப்படியான நிலையில்தான், 24/7 சேவை என்பது அவசியமாகிறது.

உலகம் 24/7 சேவையை நோக்கிச் சென்று கொண்டிருக்கும்போது, விடுமுறைகளை அதிகரித்துக்கொண்டே செல்வது என்பது பின்னோக்கி செல்வதாகாதா? தமிழ்நாட்டின் மக்கள்தொகையில், 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி 87.6% இந்துக்கள். அதாவது, 8இல் ஒருவர் பிற சமயத்தவர். அப்படியானால், இதைப் பொதுவான விடுமுறையாக அளிக்காத நிலையில், இந்துக்கள் அனைவருமே விடுப்பு எடுத்தாலும்கூட 8இல் ஒருவர் பணிக்கு வருவார் என்பதுதானே எதார்த்தம்? இந்துக்களிலும்கூட, வீட்டில் துக்கம் நிகழ்ந்திருந்தால் தீபாவளி போன்ற பெரிய பண்டிகைகளையே கொண்டாடாமல் இருக்கிற நடைமுறை உண்டு. ஆக, எந்தப் பண்டிகைகையுமே 15-20% பேர் கொண்டாடாமல் இருக்கிற வாய்ப்பு உள்ளது. கொண்டாட்டமும் இல்லாததால் வீட்டில் இருப்பதும் அவர்களுக்குத் தண்டனையாகவே அமையும். அந்த நாளைத் தங்கள் தேவைக்கு விடுப்பாக எடுக்க முடியும் என்றால், பணிக்கு வருவதையே அவர்கள் விரும்புவார்கள். அவர்கள் பணிக்கு வருவதால் அலுவலகங்கள், தொழிற்சாலைகள் ஆகியவை தொடர்ந்து இயங்கும். அவ்வளவு குறைந்த பணியார்களைக் கொண்டு இயங்குவது சாத்தியமா? கொரோனா லாக் டவுன் காலத்தில், குறைந்த பணியாளர்களைக் கொண்டு(ஸ்கெலிட்டன் ஸ்டாஃப்) எல்லாமே இயங்க முடிந்ததே? அதுவும், ஓரிரு நாட்கள் அல்ல, மாதக் கணக்கில்!

இதில், ஒரு சமயத்தின் பண்டிகைக்கு விடுமுறை அளிப்பதாலேயே, பிற சமயங்களின் பண்டிககைகளுக்கும் விடுமுறை அளிக்கவேண்டியது அவசியமாகி விடுகிறது. 2011 கணக்கெடுப்பின்படியே, தமிழகத்தில் 5.86% கிறித்தவர்களும், 0.12% இஸ்லாமியர்களும் இருக்கிறார்கள் எனும்போது, அந்த சமயங்களின் பண்டிகைகளுக்கான விடுமுறைகளில், முறையே 84.14%, 99.88% பேர் பண்டிகையுமின்றி, தேவையுமின்றி விடுமுறையில் இருக்கிறார்கள். முன்பே குறிப்பிட்டதுபோல, இந்த நாட்கள் அவர்கள் விரும்பியபோது எடுத்துக்கொள்ளும் விடுப்பாக எடுத்துக்கொள்ள முடியும் என்றால், இந்த விடுமுறைகள் ரத்து செய்யப்படுவதை, பிற சமயத்தவர்கள் மட்டுமின்றி, அந்தந்தச் சமயம் சார்ந்தவர்களே வரவேற்பார்கள் என்பதுதான் உண்மை நிலை.

அதனால், சமயம் சார்ந்த விடுமுறைகள் அனைத்தையும் ரத்து செய்து, அவற்றை ஊழியர்கள் எடுத்துக்கொள்ள அனுமதிக்கும் தற்செயல் விடுப்புக் கணக்கில் சேர்ப்பது என்பது, ஊழியர்களுக்கும் உதவியாகவும், நிர்வாகம், உற்பத்தி முதலானவற்றுக்கும் பயனுள்ளதாகவும் அமையும். கவனிக்க வேண்டியது என்னவென்றால், ஏற்கெனவே இருக்கிற ஆர்எல் என்னும் சமயம் சார்ந்த விடுப்பு. விடுப்பு எடுக்கிற நாளின்மீது எப்போது எடுக்கலாம் என்பதான கட்டுப்பாடுகள் விதிப்பது, அதற்கு விடுமுறையாகவே இருக்கட்டும் என்ற உணர்வைத் தோற்றுவித்துவிடும். அதனால், அப்படியான கட்டுப்பாடுகள் இன்றி, விடுப்புக் கணக்கில் வரவுவைக்க வேண்டும். சொல்லப்போனால், சுதந்திர நாள், குடியரசு நாள், காந்தி பிறந்தநாள் ஆகியவற்றைத் தவிர, மற்ற அனைத்து விடுமுறை நாட்களையும் ரத்து செய்துவிட்டு, ரத்து செய்யப்பட்ட எண்ணிக்கைக்கு சமமான நாட்களை ஊழியர்களின் விடுப்புக் கணக்கில் வரவு வைத்தல் என்பது, மிகப்பெரிய முன்னேற்றமாக இருக்கும்.

இவை மட்டுமின்றி, இந்த அறிவிக்கப்பட்ட விடுமுறை நாட்கள், மக்களுக்கும் அரசு ஊழியர்களுக்குமான இடைவெளியையும் அதிகரிக்கின்றன. ஒரு வேலைக்காக அரசு அலுவலகத்து வருகிற மக்கள், அன்று அரசு விடுமுறை என்று தெரியும்போது, தங்கள் வேலை நடக்கவில்லை என்ற வருத்தத்தில், இவர்களுக்கெல்லாம் ஊதியத்துடன் விடுப்பு வழங்கப்படுகிறது என்ற வெறுப்பாகவே மாற்றிக் கொள்கிறார்கள். குறைந்த ஊழியர்களுடன் அலுவலகம் இயங்கினால், அவர்கள் பணியை செய்து தரவேண்டிய ஊழியர் இல்லையென்றாலும், அவர் அவரது விடுப்பில் சென்றிருக்கிறார் என்ற உணர்வே ஏற்படும். எனவே, விடுமுறைகளை ரத்து செய்வது என்பது, ஊழியர்களுக்கு மட்டுமின்றி, எல்லா நாட்களிலும் அலுவலகம் திறந்திருக்கிறது என்ற வகையில், மக்களுக்கும் மகிழ்ச்சிக்குரியதாகவே இருக்கும். சொல்லப்போனால், வழக்கமான வார விடுமுறை நாட்களில்கூட அலுவலகத்தைத் திறக்கவும், அந்நாட்களில் பணிக்கு வருபவர்களுக்கு கூடுதல் விடுப்பு உள்ளிட்ட பலன்களைத் தந்து ஊக்குவிக்கவும் வேண்டிய காலகட்டத்திற்கு நாம் வந்திருக்கிறோம். ஸ்டாலினின் நாட்காட்டியையேகூட, தற்போதைய காலத்திற்கேற்ற மாற்றங்களுடன் நடைமுறைப்படுத்தினால், மிகப்பெரிய வளர்ச்சியை அடையலாம்!

குறிப்பிட்ட சிலரை திருப்திப்படுத்துவதற்காக, தைப்பூசம் போன்று புதிய புதிய சமயம் சார்ந்த விடுமுறைகளை அறிவிப்பது, நிச்சயம் முற்போக்கான நடவடிக்கை அல்ல. பல்வேறு தளங்களிலும் இந்தியாவின் முதல் மாநிலமாகத் திகழ்கிற தமிழகம், சமயம் சார்ந்த விடுமுறைகளை விடுப்புகளாக மாற்றுகிற நடவடிக்கையையும் எடுத்து, வளர்ச்சிக்கான வழியில் மற்றொரு அடியினை எடுத்துவைத்து, மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக மாறவேண்டும்!

No comments:

Post a Comment