இந்த வலைப்பூவைத் தொடங்கிய காலத்தில், பல தொடர்ச்சியாக எழுத வேண்டிய பணிகள் இருந்தன. அப்படி சங்கக்குரல் உள்ளிட்ட இதழ்களில் வெளியானவற்றை மீண்டும் இங்கு பதிவிட நான் விரும்பாததால், இது அப்படியே நின்று போனது. இப்போது, இதற்காகவே தொடர்ந்து எழுதத் திட்டமிட்டிருக்கிறேன். இதில் பதிவிடப்படுபவற்றை பிறர் பயன்படுத்திக்கொள்ளத் தடையில்லை!
-அறிவுக்கடல்

Sunday, July 3, 2011

ஒப்பந்தமும் சொந்த-பந்தமும்!

தற்போது சகலத்துக்கும் கான்ட்ராக்டர்கள் வந்துவிட்டார்கள். கல்யாணம், காது குத்து முதல் சிறு சிறு விழாக்கள் வரை ஆதியோடு அந்தமாய் அனைத்தையும் செய்து தருகிறார்கள். கூட்டுக்குடும்ப முறை காணாமல் போய் தனிக்குடித்தனங்களாக அகிவிட்ட நிலையில் வெறும் பெற்றோரும் பிள்ளைகளுமாய் உள்ள குடும்பங்கள் தனியே வைபவங்களை நடத்துவது இயலாத செயலாகிவிட்டது. பணிபுரியும் நிறுவனத்துக்குத்தக வெளியூரிலும் குடியேறிவிடுவதால் சொந்த பந்தங்களும் விசேசங்களில் முழுமையாக துணைக்கு நிற்க முடியாமல் போய்விடுகிறது. அக்காலங்களில் குடும்ப உறுப்பினர் எண்ணிக்கையே குறைந்தபட்சம் இரட்டை இலக்கத்தில்தான் இருக்கும். எனவே 'இது நம்ம வீட்டுக் கல்யாணம்' என்று பொறுப்புக்களில் பங்கேற்க மாமன், மச்சான், சித்தப்பா, பெரியப்பா என்று பட்டாளமே இருக்கும். இப்போதுதான் அவர்களெல்லாம் தூரத்து உறவுகளாகிவிட்டார்களே!

குடும்பத்தினரே வேலைகளைப் பங்கிட்டு செய்துவிடும்போது செலவு மிகவும் குறைவு என்பது சொல்ல வேண்டியதில்லை. அது மட்டுமல்ல, நம் சொந்த வேலை என்ற அக்கறையும் இருக்கும்.

தமிழகம் ஒன்றும் ஆளில்லாத சிறிய குடும்பம் அல்ல. வேலைக்காகக் காத்திருக்கும் இளைஞர்கள் லட்சக்கணக்கில்! எனவே எந்த வேலைக்கும் கான்ட்ராக்டர்களைத் தேடிக்போகும் அவசியம் இல்லை. தேர்தலின்போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் குறிப்பிட்டப்பட்ட இலவசப் பொருட்களை வழங்க தமிழக அரசு தீவிர முயற்சிகளைத் துவக்குவதாக அறிவிப்புக்கள் வெளியானவுடனேயே, ரூ.2000க்குள் கிரைண்டர் தர உற்பத்தியாளர்கள் தயார் என்று அறிவிக்கிறார்கள். ஒரு கிரைண்டர் வாங்குவதென்றால் கடையில் வாங்குவது சரி. கோடிக்கணக்கில் தேவைப்படும்போது? வீட்டில் இத்தனைப் பேர் வேலையின்றி உள்ளபோது விலைகொடுத்து வாங்குவது சிக்கனமாக இருக்குமா? எந்த உற்பத்தியாளராவது லாபம் இன்றி எதையாவது உற்பத்தி செய்து விற்பாரா? மேலும் ஒப்பந்தங்கள் என்றால் இடையில் கமிசனும் வந்துவிடுமே? ஒரு மன்னன் செய்வது முழுமையாக மக்களுக்கு சென்றடையவி;ல்லை என்பதை பனிக்கட்டியை வழங்கச்செய்து கடைசியில் மக்களிடம் சேரும்போது நீரே மிஞ்சியதை விளக்கிய அமைச்சரின் கதை நமக்குத்தெரியும். தற்போது தமிழக அரசு வழங்கும் இலவசப் பொருட்களின் நிலையும் அவ்வாறு ஆகிவிடாமல் அரசு செலவிடும் ஒவ்வொரு காசுக்கும் உரிய மதிப்புள்ள பொருட்கள் மக்களுக்குக் கிடைக்க வேண்டும். அதற்கு அரசே நிறுவனங்களைத் துவக்கி தமிழக இளைஞர்களுக்கு வேலையும் அளித்து, மக்களுக்கு இலவசமானாலும் தரமான பொருட்களைத் தரவேண்டும்.

இதெல்லாம் நடக்கிற காரியமா? முதலில் நிதியாதாரம் வேண்டும். நிச்சயமாக விலை கொடுத்து வாங்கத் தயாராகிவிட்டபிறகு, அந்த நிதியை நாமே உற்பத்தி செய்யப் பயன்படுத்துவது என்பதில் ஒன்றும் புதிதாக நிதியாதாரம் தேவைப்படப்போவதில்லை. மேலும் உற்பத்தியாளர்களும் ஒரே நேரத்தில் கோடிக்கணக்கில் உற்பத்தி செய்ய அரசின் ஒப்பந்தத்தைக்காட்டி வங்கிகளிடமே நிதி உதவி பெறப்போகிறார்கள். தனியார் உற்பத்தியாளர்களுக்கே அது சாத்தியமென்றால் அரசுக்கு சாத்தியமில்லையா?

இந்தத் தொழிற்சாலையெல்லாம் அரசு நடத்த முடியுமா? எந்தத்துறையிலும் அரசால் முடியாததது என்று ஒன்று இருக்கவே முடியாது. தொழிலாளர்களோடு சேர்த்து அந்தத்துறையின் நல்ல தொழில்நுட்ப வல்லுனர்கள் ஓரிருவரையும் பணிக்கு அமர்த்துவதுடன், சுவரன்சிங் மாதிரியான பொறுப்பான, மக்கள்நலன்மீது அக்கறை உள்ள அய்.ஏ.எஸ். அதிகாரிகளை ஒவ்வொரு நிறுவனத்துக்கும் பொறுப்பாக நியமிக்க வேண்டும். தனியாரால் செய்ய முடிவது அரசால் செய்ய முடியாமல் போய்விடுமா என்ன?

எல்லோருக்கும் கொடுத்தபின் தொழிற்சாலையை என்ன செய்வது? அரசு அறிவித்துள்ளபடி தகுதிபெறும் அனைவருக்கும் வழங்குவது ஒரு நாளிலோ, ஒரு மாதத்திலோ சாத்தியமானதல்ல. அதற்கே நீண்ட நாட்கள் ஆகும். அத்துடன் கடந்த ஆட்சியின் இலவசத் தொலைக்காட்சிபோல குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் இலவசம் என்று அறிவிக்கவில்லை. எனவே பொருளின் தரம் நன்றாக இருந்தால் மற்றவர்களும் இதையே வாங்கத் துவங்கிவிடுவார்களே? ஒரு காலத்தில் தமிழக அரசு நிறுவனத்தின் தயாரிப்பான சியர்ஸ் எல்காட் தொலைக்காட்சி சக்கைப் போடு போடவில்லையா? நிர்வாகச் சீர்கேடு இல்லாமல் பார்த்துக்கொள்வதுடன், புதிய தொழில்நுட்பங்களையும் அவ்வப்போது உள்வாங்கிக் கொண்டால் நிறுவனத்துக்கு என்றுமே வெற்றிதான்!

அத்துடன் என்ன மறைத்துப் பேசினாலும் 'அவனன்றி ஓரணுவும் அசையாது' என்பதுபோல ஒப்பந்தங்கள் கமிசனின்றி அசையாது. தனியார் தயாரிப்பாளர்கள் தங்கள் லாபம் போக அந்தக் கமிசனுக்கும் சேர்த்து பொருளின் தரத்தைக் குறைத்துத்தான் உற்பத்தி செய்வார்கள். எனவே அரசே நிறுவனங்களைத் துவக்கினால் வாங்கித் தருவதைவிட சிறந்த பொருட்களை மக்களுக்குத் தர முடியும்.

இவை எல்லாவற்குக்கும் மேலாக, சில ஆயிரம் தமிழக இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும். சில ஆயிரம் சிறுதொழில் முனைவோருக்கு அரசு நிறுவனத்துக்கு உதிரிப் பொருட்கள் வழங்கும் வேலை கிடைக்கும். அந்தக் குடும்பங்களுக்கு ஒளியேற்றிய பெருமை தமிழக முதல்வருக்குக் கிடைக்கும்.

மேலும் கலைவாணர் ஒரு படத்தில் கிழிந்த ரூபாய் நோட்டு இத்தனைப் பேரின் தேவையை சரிசெய்தது என்று ஒரு நிகழ்ச்சியைக் காட்டியிருப்பார். அதாவது செலவிடப்படும் பணம் பொருளாதாரத்தில் அடுக்கடுக்கான பலமடங்கு வளர்ச்சியை ஏற்படுத்துகிறது. உற்பத்தி செய்து விற்பனை செய்யும் பெரு முதலாளிகளுக்கு அடிப்படைத் தேவைகளுக்காகச் செலவிடவேண்டிய நிலை இல்லை, எனவே தங்கள் வருமானத்தில் ஒரு சிறு பகுதியை மட்டுமே செலவிடுவார்கள். ஆனால் தமிழக இளைஞர்களுக்கு புதிதாக வேலையளித்தால் அவர்கள் அதில் பெரும்பகுதியைத் தங்கள் வாழ்க்கைக்காக அவ்வப்போது செலவிடுவார்கள். இது தமிழக அரசுக்கே அவர்களின் தொழில் வரி, அவர்கள் வாங்கும் அனைத்துப் பொருட்களிலிருந்தும் வரிகள் என்று பல்வேறு விதமான வரிகளாக வருமான உயர்வு தருவதுடன், தமிழகத்தின் பொருளாதாரத்தையும் பலமடங்கு உயர்த்தும்.

எனவே தமிழக அரசு வழங்கப்போகும் இலவசப் பொருட்களுக்கு ஒப்பந்தங்களை நாடாமல், அனைத்திற்கும் அரசே நிறுவனங்கள் துவங்கி சொந்த பந்தங்களாம் நம் இளைஞர்களுக்கு வேலையளிக்க வேண்டும் என்பது பணிவான கோரிக்கை!