இந்த வலைப்பூவைத் தொடங்கிய காலத்தில், பல தொடர்ச்சியாக எழுத வேண்டிய பணிகள் இருந்தன. அப்படி சங்கக்குரல் உள்ளிட்ட இதழ்களில் வெளியானவற்றை மீண்டும் இங்கு பதிவிட நான் விரும்பாததால், இது அப்படியே நின்று போனது. இப்போது, இதற்காகவே தொடர்ந்து எழுதத் திட்டமிட்டிருக்கிறேன். இதில் பதிவிடப்படுபவற்றை பிறர் பயன்படுத்திக்கொள்ளத் தடையில்லை!
-அறிவுக்கடல்

Monday, November 10, 2014

கெட்டிக்காரன் புளுகு!


கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள் என்பார்கள். ஜன்தன் யோஜனாவுக்கும் அதே கதைதான்! ஏழ்மையை விரட்ட, நிதித் தீண்டாமையை விரட்ட என்றெல்லாம் பிரமாதமாக விளம்பரப்படுத்தப்பட்ட இத்திட்டத்தின்கீழ் முதல் கட்டமாகச் சுமார் 7 கோடி வங்கிக் கணக்குகள் துவங்கப்பட்டுள்ளன. ஏழ்மையை விரட்ட வந்த திட்டம், எனவே, 7 கோடிப்பேர் பணக்காரர்களாகி விட்டார்கள் என்றுதானே அர்த்தம்...? பணக்காரர்களாக வேண்டாம், ஏழைகளாக இல்லாமல் உயர்ந்திருக்கவாவது வேண்டுமே? அதெல்லாம் தெரியாது. ஆனால், திட்டத்தில் சேர்ந்து வங்கிக் கணக்குத் துவங்குபவர்களுக்கு இலவசக் காப்பீடு என்று அறிவிக்கப்பட்டதல்லவா, அது 5 கோடிக்கும் மேற்பட்டோருக்கு இல்லை என்று மட்டும் செய்தி வெளியாகியுள்ளது. ஏன்?
அவர்கள் அந்த வங்கிக் கணக்கில் பணம் போடவில்லையாம்! ஏழ்மையை விரட்ட என்றால் ஏழைகளிடமிருந்துதான் விரட்ட வேண்டும். அப்படி ஏழைகளுக்கு வங்கிக் கணக்குத் துவங்கி விட்டுப் பணம் போடவில்லை என்றால்...? வங்கியில் போடப் பணம் இருந்தால் அவன் ஏன் ஏழையாக இருக்கிறான்?
அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது என்கிறது ரூ.1 லட்சம் விபத்துக் காப்பீட்டை அளிக்க வேண்டிய எச்டிஎஃப்சி எர்கோ என்ற தனியார் பொதுக்காப்பீட்டு நிறுவனம்! கணக்கில் பணம் போட்டால்தான் காப்பீடாம்! அதுவும், ஏதோ ஒருமுறை பணம் போட்டாலும் போதாதாம், விபத்து நடந்தால், அதற்கு முந்தைய 45 நாட்களில் கணக்கில் ஏதாவது பரிவர்த்தனை செய்யப்பட்டிருந்தால் மட்டுமே காப்பீடு என்கிறது இந்நிறுவனம்! ஆக, கணக்குத் துவங்கிவிட்டோம், ஏழ்மையை விரட்டிவிட்டோம், இலவசக் காப்பீடுவேறு அளித்துவிட்டோம் என்பதெல்லாம் கெட்டிக்காரன் புளுகுதானே?
துவங்கப்பட்டுள்ள 7 கோடி வங்கிக் கணக்குகளில் 1.71 கோடி கணக்குகளில், தங்களிடம் இருந்த கொஞ்ச நஞ்சப் பணத்தையும் ஏழைகள் செலுத்திவிட்டனர். மீதமுள்ள 5 கோடியே சொச்சம் கணக்குகளுக்குத்தான் இந்தக் கதை! சரி... ஏதோ ரூ.5 ஆயிரம் மிகைப் பற்று என்றார்களே, அதை  பணம் செலுத்தாத இந்த ஏழைகள் எடுத்திருக்க முடியாதே, அதனால் கணக்கில் ரூ.5,000 இருப்பதாகக் கருதலாமே...? கேள்வியெல்லாம் நல்லாத்தான் இருக்கு, ஆனா... 6 மாதத்துக்கு கையில இருக்கிற எல்லாப் பணத்தையும் போட்டு எடுத்து திருப்திகரமா வரவு செலவு செஞ்சாத்தான் அந்த ரூ.5,000 கொடுக்கிறதப் பத்தி யோசிக்கவே செய்வாங்களாம்... அப்ப அதுவும் டுபாக்கூரா?
அவசரப் படாதீங்க, கொஞ்சநாள்ல இலவசக் காப்பீடு கொடுத்திடுவோம் என்கிறார் இந்திய தேசிய வழங்குதல்கள் கழகத்தின் (NPCI) நிர்வாக இயக்குனர் ஏ.பி.ஹோட்டா. எப்படி என்றால், இந்தக் கணக்குகள் துவங்கியதே, மானியங்களை ரொக்கமாக வழங்குவதற்காகத்தானே, அதனால், பல்வேறு மானியங்கள் இந்தக் கணக்குகளுக்கு வர ஆரம்பித்துவிடும், அப்புறம் வரவு செலவு தானா நடக்கும்ல என்கிறார். ஏற்கெனவே, 54 மாவட்டங்களில் முன்னோடியாக, ஆதார் எண் இல்லாதவர்களுக்கும் சமையல் எரிவாயுவுக்கான மானியம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கும் திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படவிருக்கிறதா
ம்! ஆக, ஏழ்மை ஒழிப்பு, நிதித்தீண்டாமை மறுப்பு, இலவசக் காப்பீடு எல்லாம் தூண்டிலில் வைக்கப்பட்ட புழுக்களே... இறுதி இலக்கு, ரேசனை ஒழித்து, மானியத்தை ரொக்கமாக வழங்குவதே! இடையில் அரசுக்குக் கூடுதல் பலன், ஏழைகளிடமிருக்கும் கொஞ்ச நஞ்சப் பணத்தையும் வங்கிக்குக் கொண்டுவந்து, ஏதாவது ஒரு தனியார் முதலாளிக்கு, சிண்டிகேட் வங்கி கொடுத்ததுபோலக் கடனாகக் கொடுத்துவிட்டு, வராக்கடன் என்று ஏப்பம் விடுவது!
ஜன்தன் யோஜனாவின் நீலச்சாயம் வெளுத்துப்போச்சு... டும், டும், டும்!

No comments:

Post a Comment